காங்கிரஸ் தனித்து நின்றால் இளங்கோவனே முதல்வர்: குஷ்பு

தருமபுரி:

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், ஈவிகேஎஸ் இளங்கோவனே முதல்வர் என்று கூறினார் குஷ்பு.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சார கூட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. திருவாரூரில் திங்கள் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி 40 சதவீதமாக உயர்ந்து, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றார். மேலும், 2016-இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது, மத்தியில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதே காங்கிரஸின் லட்சியம் என்றும் கூறினார்.

இந்நிலையில் தருமபுரியில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, காங்கிரஸ் எங்க தயவு இல்லாம யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தமிழக முதல்வர் என்று பேசினார். அதைக்கேட்டு மேடையில் இருந்த காங்கிரசார் மட்டுமல்ல ஈவிகேஎஸ் இளங்கோவனே கூட ஷாக் ஆகித்தான் போகிறார்.