ஜெருசலேம் புனிதப் பயண நிதி உதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிதியுதவி பெற, வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயோ சமுத்திரம், கிறிஸ்தவ மதத் தொடர்புடைய புனிதத் தலங்களை உள்ளடக்கிய பயணத்துக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்து வருகிறது. வரும் மார்ச் மாதம் முதல் ஜூன் வரை புனிதப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இப் பயணத்துக்கு, தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும், w‌w‌w.bc‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 1.1.2016ஆம் தேதியில் ஓராண்டு செல்லத்தக்க வகையிலான பாஸ்போர்ட் உள்ளவராக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள மருத்துவ, உடல்தகுதி உடையவராக இருக்க வேண்டும். பயணத்துக்கான செலவில் அரசு வழங்கும் ரூ. 20 ஆயிரம் நீங்கலாக மீதமுள்ள தொகையைச் செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒரே குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 பேர் பயணம் செய்யலாம். 70 வயது நிறைவடைந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லவும் அனுமதிக்கப்படும். மாவட்ட வாரியாக உள்ள கிறிஸ்தவ மக்கள்தொகை அடிப்படையில், கணினி மூலம் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவோர் அரசால் தேர்வு செய்யப்பட்ட பயண முகவர்கள் மூலமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையின் மேல் ஜெருசலேத்துக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு இம் மாதம் 25ஆம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, 5ஆவது தளம், அண்ணா சாலை, சென்னை 2.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.