தேசிய இளைஞர் தினத்தில் டாஸ்மாக் கடைகளை மூட போராடிய 29 பேர் கைது

தஞ்சாவூர்:

தேசிய இளைஞர் தினம் என்று கொண்டாடப் படும் விவேகானந்தர் பிறந்த நாளில் (ஜன. 12) மதுபானக் கடைகளை மூடக் கோரி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக்கு செவ்வாய்க்கிழமை பூட்டுபோட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 29 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூரில் இந்து மக்கள் கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவையாறு நிறுத்தத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். விவேகானந்தர் பிறந்த தினத்தில் டாஸ்மாக் கடையைத் தமிழக அரசு மூட வேண்டும். இளைஞர்களைச் சீரழிக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி வந்த இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி, கடைக்குள் செல்ல முயன்ற அக்கட்சியைச் சேர்ந்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அது போல்,ம் கும்பகோணத்திலும் போராட்டம் நடைபெற்றது. மடத்துத் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டமும், தர்னாவும் நடைபெற்றது.பின்னர், உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. கைகளில் பூட்டை ஏந்தியபடி ஊர்வலமாக டாஸ்மாக் கடைக்கு சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.