அருந்தொண்டாற்றிய அறிஞர்களுக்கு தமிழக அரசு விருதுகள்: தினமணி ஆசிரியருக்கு திரு.வி.க. விருது

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதனுக்கு தமிழக அரசின் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் எட்டு அறிஞர்களுக்கு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ரூ.1 லட்சம், தங்கப் பதக்கம்: விருது பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வரும் சனிக்கிழமை (ஜனவரி 16) நடைபெறும் திருவள்ளுவர் திருநாள், தமிழக அரசின் விழாவில் இந்த விருதுகளை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 46 பேருக்கு நிதியுதவி அரசாணைகளும் இந்த விழாவில் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2015-ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுவோர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விருது பெறுவோர் விவரம்:
திருவள்ளுவர் விருது-முனைவர் வி.ஜி.சந்தோசம்,
தந்தை பெரியார் விருது-தருமபுரி வி.ஆர்.வேங்கன்,
அண்ணல் அம்பேத்கர் விருது-எ.பொன்னுசாமி,
பேரறிஞர் அண்ணா விருது-பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா பாப்பா-காரைக்குடி,
பெருந்தலைவர் காமராசர் விருது-பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் இரா.வேங்கடசாமி, காந்தி நிகேதன், தே.கல்லுப்பட்டி,
மகாகவி பாரதியார் விருது-கவிஞர் பொன்னடியான்,
பாவேந்தர் பாரதிதாசன் விருது-முனைவர் வீ.ரேணுகாதேவி, மதுரை,
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது-கி.வைத்தியநாதன், தினமணி ஆசிரியர்,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-இரா.கோ.ராசாராம், மதுரை.
விருது வழங்கும் விழா: தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கும் விழா,

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வரும் 16-ஆம் தேதியன்று நடைபெறும். விருது பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியன வழங்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 46 பேருக்கு நிதியுதவிக்கான அரசாணைகள் விழாவில் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான தமிழ்ப் பணிக்காக, “தினமணி’யின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு, கடந்த 2010-ஆம் ஆண்டு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது “தினமணி’யின் ஆசிரியராக உள்ள கி.வைத்தியநாதனுக்கு திரு.வி.க. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “தினமணி’ பத்திரிகையில் ஆசிரியர் பணியில் இருக்கும் போதே அரசு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை கி.வைத்தியநாதன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிஞர்களின் பணியைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் விருது விழாவுக்கு அனைவரும் வரலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விருது வழங்கும் விழாவுக்கென தனியாக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டாலும், அழைப்பிதழ்கள் இல்லாதவர்களும் வரலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.