ஜல்லிக்கட்டு போல் சேவல் சண்டை: தடையை மீறிய ஆந்திரா

கோதாவரி:

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் ஆந்திர மாநிலத்தில் சங்காராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம்.

சேவல் சண்டைகளின் போது, சண்டையிடும் சேவல்களின் கால்களில் கத்தியைக் கட்டி ஒன்றோடு ஒன்று மோதவிடுவர். இந்தச் சண்டையில் ஏதாவது ஒரு சேவல் இறந்தாலோ அல்லது எழுந்து நிற்க முடியாத அளவுக்கு ரத்தக் காயம் அடைந்தாலோ மட்டுமே சேவல் சண்டைப் போட்டி முடிவுக்கு வரும். இதனால் சேவல் சண்டைக்கு ஆந்திர உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது.

ஆனால் தடையை பொருட்படுத்தாமல் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரில் நடைபெற்ற சங்கராந்தி விழாவில் சேவல் சண்டை நடத்தப்பட்டது.

ஆளும் தெலுங்கு சேதம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகந்திவெங்கடேஸ்வரா ராவ் சேவல் சண்டையை தொடங்கி வைத்தார்.

காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் தடையை கண்டுகொள்ளாமல் சேவல் சண்டை நடத்தப்பட்டிருப்பதுடன் அதனை ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரே தொடங்கி வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டும் உச்சநீதிமன்ற தடையை மீறி ஆந்திராவில் பல நூறு கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு சேவல் சண்டை நடைபெற்றது.