dinakaran cooker - 2026

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் தவறு செய்யவில்லை என்றால் எதற்கு பதற வேண்டும்? என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு விவகாரம் குறித்து டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது….

முதலமைச்சர் மீதே கொலை, கொள்ளை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் முதலமைச்சர் உண்மையிலே தவறு செய்யவில்லை என்றால் எதற்காக இப்படி பதற வேண்டும்? தில்லி சென்று அந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தவர்கள் இருவரையும் அவரசம் அவசரமாக ஏன் கைது செய்ய வேண்டும்?

நீதிமன்றம் அவர்களை சிறையில் அடைக்க மறுத்துவிட்டது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏதோ ஒரு பதற்றம் தெரிகிறது. காவல்துறை முந்திக்கொண்டு பேட்டி அளிக்கிறது. இவை அனைத்தும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதை இவர்கள் விசாரிக்க மாட்டார்கள். இதனை விசாரிக்க காலம் வரும். அப்போது இது உரிய முறையில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டலாகப் பேசினார் டிடிவி தினகரன்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இதையடுத்து கோடநாடு வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்.பி செந்தில் குமார் தலைமையில் போலீஸார் தில்லி சென்று சயன் மற்றும் மனோஜ் இருவரையும் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தி, பின்னர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாரிடம் நீதிபதி, என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு காவல்துறையினர் அளித்த பதிலும், உரிய ஆதாரங்களும் போதுமானதாக இல்லை எனவும் சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது? என சரமாரி கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

மேலும் சயான், மனோஜை நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். இத்தகைய பின்னணியில் இது தமிழகத்தில் பெரும் அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending