பெட்ரோல் பங்க்கள் இன்று பகலில் மட்டுமே இயங்கும்

சென்னை: பெட்ரோலிய விற்பனையாளர்களின் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்.11 சனிக்கிழமை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பி.கே.முரளி கூறிய போது… டீலர் மார்ஜின் எனப்படும் விளிம்புத் தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பெட்ரோலிய விற்பனையாளர்கள் சனிக்கிழமை இன்று கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள விற்பனை நிலையங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும். அதன்பிறகு விற்பனை நிலையங்கள் இயங்காது. ஏப்ரல் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கும் என்றார்.