தியாகிகளின் ரத்தத்தை சம்பிரதாயச் சடங்குகளின் வெப்பத்தில் உலர விடவேண்டாம்
வீரர்களின் உடலை புகழுரைகளின் தீயில் எரியூட்ட வேண்டாம்
விரைவில் சருகாகும் மறதியின் மலர் வளையங்கள் வேண்டாம்
அந்த ஆன்மாக்களின் லட்சியம் நிறைவேறும்வரை
தேசியக் கொடியால் மூடப்பட்ட அந்த உடல் சிதிலங்கள்
நினைவின் உறைபனியிலேயே நீடித்து இருக்கட்டும்
சில கணக்குகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டாகவேண்டும்.
தென் திசை நோக்கிக் கிடத்தப்பட்ட
உடல் வரிசை முன் ஏற்றப்படும் அமர் ஜோதி
எந்த அரசியல் புயல் காற்றிலும்
அணையாமல் எரிந்தாகவேண்டும்
தேசத்தின் அனைத்து சாலைகளிலும் ஓடட்டும்
தியாகத்தின் வெதுவெதுப்பான ரத்தக் கலசம் சுமக்கும் ரதங்கள்
தேசத்தின் அனைத்து மாடங்களிலும் பறக்கட்டும்
காவல் தெய்வங்களின் சீருடைக் கொடிகள்
கல்விசாலைகளின் அறிவிப்புப் பலகை எங்கும் ஒளிரட்டும்
படுகொலை செய்யப்பட்ட வீரர்களின் டிஜிட்டல் பிம்பங்கள்
*
ஒளிரும் பொற்க்ரீடத்தின் விசேஷ வைரக்கல்லைப் பெயர்த்து
தேசிய த்வஜத்தின் நீல தர்மச் சக்கரத்தைப் பொருத்துங்கள்
பாலை நரகம் சூழ் திரிசங்கு பூமியை
சொர்க்கத்துடன் சேருங்கள் நரன்களின் இந்திரரே
பல தரப்பட்ட இசைக்கருவிகள்
ஒன்று சேர்ந்து ஒலிக்கட்டும்
ஒற்றை இசைக்குறிப்பை
முன் வரிசையில் நின்றபடி முரண்பட்டு ஒலிக்கும்
இசையறியாத கரங்களில் இருந்து
மீட்கப்படட்டும் சத தந்த்ரி வீணைகள்
*
இமயத்தின் ஒற்றைக் கண்ணீர்த் துளி
உருண்டு உருண்டு ஓடையாகி ஆறாகிப் பேராறாகி
இடைப்பட்ட நிலம் முழுவதும் ஈரமாக்கி
இந்து மகா சமுத்திரத் தாய்மடி சேரட்டும்
அவற்றோடு தேசத்தின் ஒட்டுமொத்தக் கண்ணீர் துளிகளும்
ஒருங்கிணைந்து உருவாகட்டும்
முடிவற்று அலையடிக்கும் ஒற்றை இந்தியப் பெருங்கடல்
பிரிவினையின் புயலில் சிக்கும் தோணிகளை
கரை சேர்க்கும் குமரி அன்னை கொற்றவையாய் உருமாறட்டும்
அவள் அறுத்தெரியும் வெஞ்சின முலைகள்
புண்ணிய தேசத்தின் சனாதன தர்மத்தின்
எதிரிகள் அனைவரையும் எரித்துக் கொல்லட்டும்
சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் முளைக்கட்டும்
மண் மூடிய தேச பக்தியின் பெரு வன விதைகள்
தந்தையைப் பறிகொடுத்த மகள்களின் கதறல்களை
சுமந்து திரியட்டும் நேர்மைச் சிறகு முளைத்த ஊடகப்பறவைகள் எல்லாம்
*
முடிவற்றுப் பெய்யும் பிரிவினையின் பனியை அகற்றி
புதிதாகப் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில்
மெள்ளப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது நம் வாகனம்
மெல்லிய குறுக்குக் கம்புகளை மட்டுமே கொண்ட
பிராந்தியக் கிளைச் சாலைகளின் தடுப்பரண்கள்
எப்போதும் போலவே இப்போதும் உடைக்கப்பட்டுள்ளன
வன்முறை வசனங்களால் நிரம்பிய புனித நூல் வழிநடத்த
முழுவதும் வெடி மருந்தால் நிரம்பிய வாகனங்கள் மேலும் பல
கிளைச் சாலை புதர் மறைவுகளில் உறுமியபடிக் காத்திருக்கின்றன
துல்லியத் தாக்குதலுக்கான நேரம் இது
இயல்பான இடைவெளிகளை அகலப்படுத்தி
ஆயுதப் போட்டியைத் தூண்டும்
நவ காலனிய வல்லாதிக்கக் கழுகை நோக்கி
திரும்பட்டும் நம் அகண்ட பாரதத்தின் ராக்கெட் லாஞ்சர்கள்
வல்லாதிக்க வேட்டைக்கு வாலாட்டியபடி
வாய் மூடிக் குரைக்கும் அடிப்படைவாத முகாம்கள் மீது
சீறிப் பாயட்டும் நம் நல்லிணக்கத்தின் ஏவுகணைகள்
வர்த்தக முத்து மாலை அணிவித்துக் கழுத்தை இறுக்கும்
சிவந்த கொலைக் கரங்களைக் குத்திக் கிழிக்கட்டும்
நம் தற்சார்புத் துவக்குகளின் கூர் கத்திகள்
காவல் மாடத் தீப்பந்தங்களை அணைத்து
கோட்டைக் கதவுகளை அகலத் திறந்துவைக்கும்
துரோகிகளை நோக்கி உயரட்டும்
நிலவொளியில் மின்னும் நம் தனிமைப்படுத்தலின் வேல்கள்
மறப்பதற்கான நேரம் அல்ல… மன்னிப்பதற்கான நேரமும் அல்ல
துல்லியத் தாக்குதலுக்கான நேரம் இது.



