வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கோரிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சாய்கிருஷ்ணா ஆஜாத் பூஜாலா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் வசிக்கும் தனது மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவில்… ஆந்திர மாநில வனப் பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக செம்மரக் கடத்தலில் ஈடுபடுகின்றனர். வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோரைப் பிடிக்கும் முயற்சியாக மாநில அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் ஆந்திர பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. தடா எல்லையில் ஆந்திர அரசுக்குச் சொந்தமான பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆந்திரத்தை பூர்விகமாகக் கொண்டு தமிழகத்தில் தொழில்புரிந்து வரும் உரிமையாளர்களுக்குச் சொந்தமான கடைகள், உணவகங்கள், கிளப்புகள், வங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. மதிமுக பொதுச் செயலர் வைகோ தமது மாநிலத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநிலத்தவர்களை வெளியேறும்படி மிரட்டல் விடுப்பதாக செய்திகள் வருகின்றன. ஆந்திர மாநிலத்துக்கு எதிராக அவர் மக்களிடையே கிளர்ச்சி ஏற்படும் வகையில் பேசி வருகிறார். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே அமைதி கெடும் சூழல் உருவாகியுள்ளது. இவை அனைத்தும் ஆந்திர மாநிலத்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் வசிக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கவும், வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.