
பிட்சை ஏற்று சுந்தரர் பசி தீர்த்த ஈசன்!
அமரர்கள் பலம்பெற அமிர்தம் தேவைப் பட்டது. பாற்கடலைக் கடைந்தால் அமுதம் பெறலாம் என்றனர். அசுரருக்கும் அந்த ஆசை ஏற்பட்டது. இருவரும் இணைந்து மந்தார மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தனர். மலையோ கனம் தாங்காது கடலில் அமிழத் தொடங்கியது. அது மூழ்காமல் தடுக்க, திருமால் ஆமை (கச்சப) உருக் கொண்டு மந்தார மலையின் அடியினைத் தம் முதுகில் தாங்கி நிலை நிறுத்தினார். இவ்வாறு திருமால் பலம் பெற்று மலையைத் தாங்க, சிவபெருமானின் அருளும் தேவைப் பட்டது. அவர் பூவுலகில் ஒரு மலையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அந்த மலையின் எதிரே இன்னொரு மலையில் சிவபெருமான் கோயில் கொண்டார். இவ்வாறு இருவரும் கோயில் கொண்ட மலைகள் இரண்டும் ஔஷதகிரி என, மருந்துமலை எனும் பெயர் பெற்றது.
சென்னை – செங்கல்பட்டு சாலையில், சிங்கப் பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சிறிது தொலைவில் ஆப்பூர், திருக்கச்சூர் எனும் இரு தலங்கள். ஆப்பூரில் உள்ள ஔஷதகிரி மலையில் திருமால், கல்யாணவேங்கடேசராக கோயில் கொண்டிருக்கிறார். திருக்கச்சூரில் ஈசன் மருந்தீஸ்வரராகக் கோயில் கொண்டிருக்கிறார்.
திருமால் கச்சபம் (ஆமை) உரு எடுத்து ஈசனை வழிபட்ட தலம், கச்சபவூர் என்று வழங்கப்பட்டு, இன்று திருக்கச்சூர் என்று பெயர் பெற்றுள்ளது. காஞ்சியில் ஒரு கச்சபேஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆனால், இந்தத் திருக்கச்சூரே ஆதிகச்சபேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. இங்கே உள்ளது கூர்ம தீர்த்தம். இதில்தான் கூர்மமாக திருமால் அமிழ்ந்து, அமுதம் கொணர பாற்கடலுக்குச் சென்றாராம். எனவே இது கூர்ம தீர்த்தமாகப் பேர் பெற்றது. பாற்கடல் அமுதம் இந்த தீர்த்தத்தில் கலந்ததால், இது அமுத தீர்த்தமாம்! இங்குள்ள தியாகராசப் பெருமானும் அமுத தியாகேசர் எனும் பேர் பெற்றார்.
எனவே, இந்தக் கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.
சிவபெருமான் சுந்தரருக்காகத் தம் கையில் திருவோடு ஏந்தி பிட்சை ஏற்று சுந்தரரின் பசிபோக்கிய தலம் எனும் பெருமையும் இத்தலத்துக்கு உண்டு.
தலங்களைத் தரிசித்து வந்த சுந்தரர், இங்கே ஆலயத்தினுள் சென்று பெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளியில் வந்தார். வெகு தொலைவில் இருந்து வந்த காரணத்தால் களைப்பும் பசியும் சேர, தள்ளாடி, கோயிலின் வெளி மண்டபத்தில் படுத்தார். சுந்தரரின் நிலை கண்ட ஈசன், ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்பினார். அவரை எழுந்து அமரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுத்தார்.
அன்னம் வேறு வேறு வண்ணங்களுடன், வேறு வேறு சுவையுடன் இருப்பது கண்ட சுந்தரர் காரணம் கேட்டார். சமைத்து உணவு கொண்டுதர நேரம் இன்மையால் அங்குள்ள வீடுகளுக்குச் சென்று பிட்சை ஏற்று வந்து உணவு கொடுத்ததாக அந்தணர் சொன்னார். அவரின் குரலிலும் செயலிலும் நெகிழ்ந்து போன சுந்தரர் அருகிருந்த குளத்தில் இறங்கி கைகழுவித் திரும்புவதற்குள் அந்தணர் மாயமானார். அப்போதுதான் சுந்தரர் ஈசனின் திருவிளையாடலை உணர்ந்தார். ஈசனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தம் திருவடி தேய நடந்து பிட்சையேற்று அன்ன மிட்டதை நினைந்து நினைந்து உள்ளம் உருகினார்.
திருக்கச்சூர் தலம், ஆலக்கோயில் என அழைக்கப் படுகிறது. இங்கே, மூலவர் கச்சபேஸ்வரர். ஆயினும் இது, தியாகராஜ சுவாமி திருக்கோயில் என்றே அழைக்கப் படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத் தலங்களில் தியாகராஜர் சந்நிதி உள்ள கோயில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு கோபுரம் இல்லை. கோயிலுக்கு எதிரில் உள்ள பெரிய குளமே கூர்ம தீர்த்தம் எனப்படுகிறது. இக்குளத்துக்கு அருகே தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்த 16 கால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.
கிழக்கு நுழைவாயில் வழியே சென்றதும், கிழக்கு வெளிப் பிராகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். தெற்கு வெளிப் பிராகா ரத்தில் 27 தூண்கள் கொண்ட நட்சத்திர மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள்ளே தியாகராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவுக்கு ஈசன் தம் நடனத்தை இங்கே காட்டி அருளினார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள தூண் ஒன்றில் ஆமை வடிவில் மகாவிஷ்ணு சிவ லிங்கத்தை வழிபடும் சிற்பத்தைக் காணலாம்.
மண்டபத்தின் தென் வாயில் வழியே சென்றதும் எதிரே அம்பிகை அஞ்சனாட்சியின் சந்நிதி. நான்கு திருக் கரங்களுடன் நின்ற கோலத்தில் அம்பிகை அருள் பாலிக்கிறாள். வலம் வர வசதியாக அம்மன் சந்நிதியில் தனிப் பிராகாரம் உண்டு. அம்பிகை சந்நிதி முன் மண்டபத்தில் இருந்து கிழக்குப் பார்த்த வாசல் வழியே சென்றதும், கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் கச்சபேஸ்வரரை தரிசிக்கலாம். விஷ்ணு வுக்கு அருளிய இவர் சுயம்பு லிங்க ரூபி. கருவறை அகழி அமைப்பு கொண்டது. கருவறைச் சுற்று வலம் வரும்போது, நால்வர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் காணலாம். கருவறை கோஷ்ட மூர்த்திகளாகத் திகழும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும் தரிசிக்கலாம். கோயில் வெளிப் பிராகாரத்தில், விநாயகர் சந்நிதி, கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதி, அருகே விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதி, அவருக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதி, தெற்கு நோக்கிய தனி பைரவர் சந்நிதி என பிரமாண்டமான ஆலயத்தைத் தரிசித்து மகிழலாம். இங்குள்ள பைரவர் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்தது. இத்தலம் திருப்புகழ் வைப்புத் தலமாகத் திகழ்கிறது. இங்கே முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானை சகிதராக எழுந்தருளியுள்ளார். இவரை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
தல விருட்சம், ஆலமரம். இது, மக நட்சத்திரத் துக்குரிய மரம். எனவே மக நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் இங்கே பெருமானை வழிபடுவது சிறப்பானது. கோயிலில் உள்ள வாகன மண்டபத்தில் பிரமாண்ட மான வாகனங்கள் அணிவகுக்கின்றன. நந்தியும் விடை வாகனமும் சிறப்பானவை.
திருக்கச்சூர் கோயிலின் இணைக்கோயிலாகத் திகழ்கிறது, மருந்துமலை மருந்தீஸ்வரர் கோயில். இது இந்த ஆலக்கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் சிறிய மலை மீது அமைந்துள்ளது. கோயிலின் முன் நான்கு கால் மண்டபம், ராஜகோபுரம் இல்லாதநுழைவாயில் ஆகியவற்றைக் கடந்து செல்லலாம். உள்ளே, ‘மண்ணே மருந்தான’ மருந்தீசர் சந்நிதி முகப்பு. உள்ளே நுழையும்போதே, அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபத்தைக் காணலாம். இவற்றில், துவார பாலர்கள், லிங்கோத் பவர், மாவடி சேவை, பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் என பலரின் சிற்பங்கள் வெகு அழகாக அமைந் துள்ளன. மண்டபத்தின் நடுவில் தாமரை போன்ற அமைப்பில் சிறிய சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது.
அம்பிகைக்குத் தனிச்சிறப்பு சேர்க்கும் இக்கோயில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான ஔஷதை எனும் சக்தி பீடம் என்கிறார்கள். அதற்கேற்ப இங்கே அம்பிகை இருள்நீக்கி அம்மை எனும் பெயரில் திகழ்கிறார்.
ஒருமுறை, கொடுமையான நோவு கண்ட இந்திரன், தம் நோய் தீர நாரதரின் அறிவுரையை நாடினான். அவரும், ஏற்கெனவே சிவனும் திருமாலும் அருகருகே வீற்றிருக்கும் இம் மருந்து மலையினைச் சொல்லி, இங்கே பலை, அதிபலை எனும் இரு மூலிகைகள் இருக்கும். அவையே உன் நோவுக்குத் தீர்வு என்றாராம். இதனால், இந்திரன், சிவ பெருமானை நினைந்து கடும் தவம் இருந்தான். ஆயினும் நினைத்த பலன் கிட்டவில்லை. எனவே, மீண்டும் நாரதரிடம் வழி கேட்க, அவரோ அன்னையை மறந்து தவம் செய்ததால், உனக்கு அம்மூலிகைகள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றார். தம் தவற்றை உணர்ந்த இந்திரன், இம்முறை அன்னையை மனத்தில் தியானித்து, ஈசனை வழிபட்டான். அவனது தவத்துக்கு மனம் இரங்கிய அம்பிகை, தம் பேரொளியால், மூலிகை இருக்கும் பகுதியை இந்திரனுக்குக் காட்டிக் கொடுத்தாள். இவ்வாறு இருள் நீக்கி, ஒளி கூட்டி, மூலிகையைக் காட்டிக் கொடுத்த அம்பிகைக்கு இருள்நீக்கி அம்மன் எனும் பேர் வந்தது. சிவபெருமான் ‘மருந்தீஸ்வரர்’ எனும் பேரில் திகழ்ந்தார்.
அப்போது, மூலிகை தேடி தாம் பட்ட கஷ்டத்தை சிவபெருமானிடம் முறையிட்ட இந்திரன், சாதாரண மனிதர்களுக்கு பயன் அளிக்கும் படி அருள் புரிய வேண்டினான். அவனது வேண்டுதலைக் கேட்டருளிய ஈசன், இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே இனி மூலிகை மருந்தாக மாறி பூலோகவாசிகளுக்கு பயனளிக்கும் என்று வரம் அருளினார். எனவே இங்கே கொடிமரத்தை அடுத்து இருக்கும் நாகர் சந்நிதியை ஒட்டி உள்ள மண்ணையே மூலிகைப் பிரசா தமாக மக்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளரும் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கை. அதை, திருக்கச்சூரில் இருந்து மறைமலைநகர், சிங்கப் பெருமாள் கோயில் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலையோர வயல் வரப்புகளின் செழிப்பைக் கண்டு உணரலாம்.
ஆலயத்தினுள்ளே விநாயகரை வழிபட்டு வரும் போது, சுவாமி சன்னிதிக்கு எதிரில் ஒரு சாரளம் உள்ளது. இங்கே வந்து மருந்தீசரிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும். அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் கிரக தோஷம், கண் நோய்கள் தீரும், குறைவிலா வாழ்வு கிடைக்கும்.
கொடிமரத்தின் அருகே நாகலிங்க மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் உள்ளன. சுப்பிரமணியர் சந்நிதி அருகே, ‘ஔஷத தீர்த்தக் குளம்’ உள்ளது. அழகாகக் கீழிறங்கிச் செல்லும்வகையில், படிகல் உள்பக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே, நவகிரக சன்னிதி உள்ளது.
பிராகார வலம் வரும்போது, கோஷ்ட மூர்த்தங் களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரை தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்ம முக சண்டிகேஸ்வரராக, நான்கு முகங்களுடன் வித்தியாச தரிசனம் அருள்கிறார். வேறெங்கும் காணமுடியாத சிறப்பு இது. இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள்.
அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில் அபய வரதக் கரங்களுடன் திகழ்கிறார். பைரவர் சன்னிதியும் இங்கே சிறப்பு. விநாயகரின் நேர் பார்வையில் நவகிரக சந்நிதி உள்ளது இங்கே சிறப்பான அம்சம் என்கிறார்கள். இங்கே, மருந்தீஸ்வரர் இருள்நீக்கி அம்மையாரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷம் முதலியவை நீங்கப்பெறலாம்.
அகத்தியரும் அழுகுணி சித்தரும் இங்கே தவம் செய்தனராம். எனவே பௌர்ணமி நாளில் இங்கே அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி தியானித்தால், நம் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார்கள். இம் மலையினை பௌர்ணமிகளிலும், அவரவர் நட்சத்திர நாளிலும் வலம் வருதல் சிறப்பு என்பதால், கிரி வலம் வருவோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது.
அமைவிடம்: செங்கல்பட்டு – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் அருகில் உள்ளது திருக்கச்சூர்.
– செந்தமிழன் சீராமன்



