நடிகை அல்போன்சாவிடம் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள்: பெண் புகார்

alfonsa2 சென்னை: நடிகை அல்போன்ஸாவிடம் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள் என்று பட்டதாரிப் பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்த பட்டதாரிப் பெண் ஒருவர், தனது கணவரை கவர்ச்சி நடிகை அல்போன்சாவிடம் இருந்து மீட்டுத் தருமாறு காவல் துறைக்கு கோரிக்கை விடுத்து, புகார் மனு ஒன்றைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த வயதுடைய அந்தப் பெண், எம்.சி.ஏ. படித்துள்ளாராம். இவர் நேற்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு கண்களில் நீர் பொங்க வந்தார். போலீஸாரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தார். அதில், நான் சென்னையில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படிக்கும்போது, ஜெய்சங்கர் என்பவரைக் காதலித்தேன். அவரும் நானும், ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் எங்கள் காதலை வெளியில் சொல்லவில்லை. 8 ஆண்டுகள் நாங்கள் உயிருக்கு உயிராகக் காதலித்தோம். அதன்பிறகு எங்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் பச்சைக் கொடி காட்ட, மருதமலை முருகன் கோவிலில் எங்கள் திருமணம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் எங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. எங்கள் திருமணத்தை முறையாக பதிவும் செய்து கொண்டோம். எனது கணவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். அவருடன் நான் 15 நாட்கள்தான் சேர்ந்து வாழ்ந்தேன். அதன் பிறகு அவர் துபாயில் வேலை கிடைத்து சென்று விட்டார். என்னை துபாய்க்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி விட்டு சென்றார். ஆனால் அவர் என்னை அழைத்து போகவில்லை. செல்போனில் பேசினால் அழைத்துச் செல்வதாகச் சொன்னார். பின்னர் அவர் என்னுடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார். இதனால் சைதாப்பேட்டை காவல் துறையினர் புகார் கொடுத்தோம். எனது கணவர் சென்னை வந்திருந்தபோது விசாரணை நடத்தினர். அவர் என்னை துபாய் அழைத்துச் செல்வதாக காவல்துறையிடம் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார். அதன் பிறகும் அவர் என்னை துபாய்க்கு அழைத்துப் போகவில்லை. தற்போது ஃபேஸ்புக்கில் எனது கணவர் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பதுபோல புகைப்படம் வந்தது. அந்தப் பெண்ணை தனது மனைவி என்றும், எனது கணவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். என் கணவருடன் இருக்கும் பெண், பிரபல சினிமா கவர்ச்சி நடன நடிகை அல்போன்சா என்று தெரிய வந்துள்ளது. அல்போன்சா எனக்கு போனில் பேசி மிரட்டுகிறார். அவர்தான் எனது கணவரை முதலில் திருமணம் செய்தாராம். இதனால் எனது கணவரை அவருக்கு விட்டுக் கொடுத்து விட்டு, நான் ஒதுங்கிக்கொள்ள வேண்டுமாம், இல்லாவிட்டால் என்னைத் தொலைத்துக் கட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துப் பேசுகிறார். எனது கணவர் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். எனது கணவர் எனக்கு வேண்டும். எனது 8 வருட காதல் பொய் ஆகாது. எங்கள் திருமண வரவேற்பின் போது, நடிகை அல்போன்சா வந்து வாழ்த்தி விட்டுச் சென்றார். அப்படியானால் எப்படி அவர், எனக்கு முன்பே எனது கணவரை திருமணம் செய்திருக்க முடியும். எனது உயிரான காதல் கணவரை நான் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நடிகை அல்போன்சாவிடம் இருந்து எனது கணவரை மீட்டுத் தருவதோடு, அல்போன்சா மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்தப் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். புகார் கொடுத்த உடன், ஆணயர் அலுவலக அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.