சென்னை: வக்கீல், (எல்.எல்.பி.,) பொறியாளர் (பி.இ.) சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பெண், மாநில பாமக மகளிர் அணி துணைத் தலைவி. தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சிணாமூர்த்தி உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சென்னையைச் சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்திருந்ததாகவும், அவர்கள் போலியான சான்றிதழ்களை வழங்கியதாகவும் புகார் அளித்தார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது பெரம்பூரைச் சேர்ந்த அருண்குமார் (36), கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரி (32), சேலம் குரங்குச் சாவடியைச் சேர்ந்த கணேஷ்பிரபு (28) ஆகியோர் போலி சான்றிதழ்களை தயாரித்து அளித்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களைக் கைது செய்தனர். விசாரணையில் கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி எல்.எல்.பி. படிப்பு தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தைப் பார்த்து அருண்குமார் அவரை அணுகியுள்ளார். வகுப்புக்குச் செல்லாமல், தேர்வு எழுதாமல் எல்.எல்.பி. சான்றிதழ் வாங்கித் தருவதாகக் கூறிய சண்முகசுந்தரி, ரூ. 3.5 லட்சம் பெற்றுக் கொண்டு போலியாக பந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது போன்ற போலி சான்றிதழை வழங்கியுள்ளார். மேலும் சண்முகசுந்தரியும் அவரது கணவர் குமாரும் போலியான சான்றிதழ்கள் மூலம் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்றுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த கணேஷ்பிரபுவும் இவர்களுடன் சேர்ந்து எல்.எல்.பி., பி.இ., பி.எஸ்சி, பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை போலியாக தயாரித்து வழங்கியது தெரிய வந்தது. இந்த மோசடி சம்பவத்தில் மாநிலம் முழுவதும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே 10 பேருக்கு எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரி பா.ம.க.வின் மாநில மகளிர் அணி துணைத் தலைவியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வக்கீல், எஞ்சினியர் சான்றிதழ்கள் போலியாக விற்பனை: பெண் உள்பட 3 பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari