வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

சற்றுமுன் தமிழகம்

Election Commission - 2026

வேலூரில் மக்களவை தேர்தல் ரத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலை ரத்து செய்வதாக தற்போது வரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த 30ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 10 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது. மேலும் அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான குடோனில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் சுமார் ரூ. 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது யாருடைய பணம் என்பது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து வேலுார் தொகுதியில், தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாகவும், அந்த தொகுதியில் அடங்கிய குடியாத்தம், ஆம்பூர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ரத்தாகக்கூடும் என தகவல்கள் வெளியாகின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.