பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான நோட்ரடேம் கதீட்ரல் தேவாலயம். இங்கு நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வருடத்திற்கு 13 மில்லியன் மக்கள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு நோட்ரடேம் கதீட்ரல் தேவாலயத்தில் தீ பற்றியது. முதலில் தேவாலயத்தின் மேற்கூரையில் பற்றி தீ, கொஞ்சம் கொஞ்சமாக தேவாலயம் முழுவதும் பரவியது. இதனால் ஏற்பட்ட புகைமண்டலம் நகரம் முழுவதும் பரவத்தொடங்கியது.
தகவலறிந்து வந்த 400-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தேவாலயத்தின் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையாகின. இதனையடுத்து சமீபத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த தேவாலயத்தில் எப்படி தீப்பற்றியது என்பது குறித்து கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கட்டிட கலையை உலகுக்கு பறைசாற்றும் பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட விபத்து பல்வேறு நாட்டு தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.




