காசு பணம் துட்டு மணி மணி… பிடிபட்ட இடங்களைப் பார்த்தா… அதிர்ச்சி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

velloremoneycaptured2 - 2026

தேர்தல் பிரசாரம் நேற்று முடிவடைந்து, நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும் சோதனைகள் தொடர்ந்தன.

ஆண்டிப்பட்டியில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல் என தகவல் வெளியானது. ஆண்டிப்பட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வருமானவரித்துறை அறிக்கை அளித்துள்ளது. இதை அடுத்து, வேலூர் தேர்தல் போல், இதுவும் ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க 94 கவர்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரியிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து என்ஆர் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அதிமுகவின் 92வது வார்டு அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் வாக்காளர் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து வார்டு செயலாளர் தேவதாஸ் என்பவரிடம் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்துார் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் சுப்ரமணியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.. ஏற்கனவே சுப்ரமணியன் அலுவலகம் மற்றும் தோட்டத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல் செய்துள்ள நிலையில் சோதனை நடந்தது.

சாத்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சுப்ரமணியன் என்பவர் போட்டியிடுகிறார். அவரது உறவினர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று பிற்பகலில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சுப்பிரமணியனின் தோட்டத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பம்பு செட் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.