கொள்முதல் ஆவினுக்கு! கொடுப்பது ‘ஆரூத்ரா’வுக்கு! முறைகேடு குறித்த விசாரணை கோரும் பால் முகவர் சங்கம்!

Published:

aavin milk - 2026

“ஆவினில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது என்றும், இதுகுறித்து உரிய முறையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும்,  தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கவர்கள் சங்க நிறுவனர்  சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்….

தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் “ஆவின்” பால் பண்ணையில் இருந்து “ஆருத்ரா” எனும் தனியார் பால் நிறுவனத்திற்கு எந்தவிதமான அரசாணையும் இன்றி பால் வழங்கியதில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, ஆவின் பொது மேலாளர் பசவராஜை , ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ்  சஸ்பெண்ட் செய்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஏனெனில் “ஆவின் நிறுவனத்திற்கு தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலில் இருந்து தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கப் படுகிறதா…? அப்படி வழங்கப்பட்டால் எந்தெந்த பால் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது…? என்ன விலைக்கு வழங்கப்படுகிறது…? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கடந்த 2018 நவம்பரில் “தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்” பதில் கேட்டு எங்களது சங்கத்தின் சார்பில் கடிதம் எழுதியிருந்தோம்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

நாங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒவ்வொரு ஆவின் ஒன்றியத்துக்கும் ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்ததின் அடிப்படையில் 2018 டிசம்பர் 4 தேதியிட்ட கடிதத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பண்ணையில் இருந்து கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலைக்கு மருந்து தயாரிப்பதற்காக பால், வெண்ணை, நெய் அனுப்பப் படுவதாக நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பொது தகவல் அலுவலரும்,

2018 டிசம்பர் 28 ஆம் தேதியிட்ட கடிதத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பண்ணையில் இருந்து கேரள அரசின் “மில்மா” பால் நிறுவனத்திற்கு மட்டும் நாளொன்றுக்கு 4,73,058.930 கிலோ பால் வழங்குவதாகவும், வேறு “எந்த ஒரு தனியார் பால் நிறுவனங்களுக்கும் ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் வழங்கப்படவில்லை” எனவும் தர்மபுரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது தகவல் அலுவலரும்,

12.02.2019ஆம் தேதியிட்ட கடிதத்தில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பண்ணையில் இருந்து கேரள அரசின் மில்மா பால் நிறுவனத்திற்கு பால், வெண்ணை, நெய் அனுப்பப்படுவதாக கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பொது தகவல் அலுவலரும் பதில் அளித்துள்ளனர்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இந்நிலையில் கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் இருந்து எந்த ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கும் பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்து விட்டு, எந்த ஒரு அரசாணையும் இன்றி “ஆருத்ரா” எனும் தனியார் பால் நிறுவனத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் பால் வழங்கி ஆவின் பொது மேலாளரே மோசடியில் ஈடுபட்டுள்ள தகவல் மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், அரசாணை ஏதும் இல்லாமலும், ஆவின் ஒன்றியத்தின் கணக்கிலும் காட்டாமலும் தினசரி பல ஆயிரம் லிட்டர் பாலை தனியார் பால் நிறுவனத்திற்கு வழங்குவது தனியொரு நபரால் சாத்தியமில்லை. கீழ்மட்ட அதிகாரிகள் தொடங்கி மேல்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலருக்கும் தொடர்பில்லாமல் அவ்வளவு பெரிய முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.

கிருஷ்ணகிரி பால் பண்ணையில் நடைபெற்ற முறைகேடுகள் போன்று தமிழகத்தில் உள்ள இதர ஆவின் பால் பண்ணைகளிலும் நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவே தெரிகிறது. எனவே,  நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடுவதுடன்,  சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் கூண்டோடு பதவி நீக்கம் செய்து, அவர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய ஆணையிட வேண்டும் என  கேட்டுக் கொள்கிறோம்… என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img