திருநெல்வேலி:
நெல்லையில் பலத்த மழை பெய்தது. இதனால், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட வரவேற்பு வளைவுகள் கீழே விழுந்தன.
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. நேற்றும் பிற்பகலில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
முதல்வர் ஜெயலலிதா தமது பிரசார பயணமாக இன்று நெல்லை வருகிறார். நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 20 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வேட்பாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கிறார்கள். இதற்காக பிற்பகல் 3 மணிக்கு ஹெலிகாப்டரில் நெல்லை வருகிறார்.
நெல்லை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார். அங்கிருந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள பெல் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் இருந்தபடி மக்களை சந்திக்கிறார். இதில் பகலில் வெயில் நேரத்தில் வரும் பெண்கள் அமர சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் இடிமின்னலுடன் பலத்த மழையினாலும், காற்று வேகமாக அடித்ததாலும், அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் சரிந்து விழுந்தன. பின்னர் அவற்றை சரிசெய்யும் பணி நடந்தது.



