தாலியறுக்கும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: திராவிடர் கழகம் நடத்தவிருந்த தாலியறுக்கும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. திராவிடர் கழகத்தினர் இன்று பெரியார் திடலில் தாலியறுக்கும் நிகழ்ச்சியை நடத்துவதாக அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், காவல் துறையின் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமைதியான முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்று நிபந்தனையுடன் தனி நீதிபதி அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில், இதனால் இன்று தாலியறுக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பெரியார் திடல் முன்னர் அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தெரிவித்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.