தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்துள்ளனர்
இதுகுறித்து வருமானவரித்துறை, தேர்தல் பார்வையாளர்,தேர்தல் அதிகாரி ஆகிய 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. பிடிபட்ட ரூ.570 கோடி தங்கள் பணம் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன்பு ஆஜராகி கோரிக்கை விடுத்ததாவது :-
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அருகே ரூ.570 கோடி 3 கண்டெய்னர்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் இவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் கூட இதுபற்றி எந்த கருத்தும் வெளியிடாமல் இருப்பதால் இது பல்வேறு ஐயப்பாடுகளுக்கு இடமளிக்கிறது.
இந்த பெரிய தொகை கைப்பற்றப்பட்டு 3 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட துறைகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மர்மம் அப்படியே நீடித்து வருகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து விரிவான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் பொதுநல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும்என்று அவர் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், ‘இந்த சம்பவம் தமிழ் நாட்டுக்குள் நடைபெற்று இருப்பதால் இதுபற்றி சம்பந்தப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி அங்கே மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தனர்.
அதற்கு வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, ‘இது தமிழ்நாட்டில் நடந்ததுடன், இந்த பணத்தை ஆந்திராவுக்கு கொண்டு செல்வதாக கூறியதால் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகிறது. எனவே உச்ச நீதிமன்றம் விசாரிப்பது முறையாக இருக்கும்’ என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், ‘சம்பவத்தில் தொடர்புடைய லாரிகள் தமிழ்நாட்டுக்குள் கைப்பற்றப்பட்டதால் சென்னை உச்ச நீதிமன்றத்தை முதலில் அணுகி மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.



