ஊக்க மருந்து உட்கொண்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடத்தும் விசாரணை குழுவினரிடம், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா பதிலளிக்க உள்ளார்.
ரஷ்ய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா, ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணம் ஆனதை, கடந்த மார்ச் மாதம் ஒப்புக் கொண்டார். இருப்பினும் ஊக்கமருந்து சோதனை தடுப்புக் கழகம் தடை செய்துள்ள மெல்டோனியம் என்ற பொருள், தான் உட்கொண்ட மருந்துகளில் கலந்திருந்ததாகவும், இதனால் வேண்டும் என்றே ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே, மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தான் கடந்த சில ஆண்டுகளாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் அந்தப் பொருள் கலந்திருத்ததால், தான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரை தற்காலிகமாக தடை செய்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ய, நாளை லண்டனில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சார்பில் விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணையின் போது, மரியா ஷரபோவா நேரில் ஆஜராக விளக்கமளிப்பார் என தெரிகிறது.
மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், ஏராளமான வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால், நான்கு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும் முதல் தடவை உபயோகித்திருந்தாலோ, அல்லது ஊக்கமருந்து உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தெரியாமல் உடலில் ஊக்கமருந்து சென்றிருந்ததாலோ தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.



