தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்தனர்.
சிக்கிய ரூபாய் 570 கோடி குறித்து சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதம் எழுந்தது.
அந்த பணத்திற்கு உரிமை கோரிய பாரத ஸ்டேட் வங்கி, கோவையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தது.
இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், உண்மையான ஆவணங்களை வைத்து ஆய்வு செய்ததில், அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி இருந்து இன்று (மே 17) காலை 5.30 மணிக்கு கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்ததின் காரணமாகவே மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக பல்வேறு கேள்விகளுடன் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிடிபட்ட ரூபாய் 570 கோடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்றும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் எனவும் தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது என யூகிப்பதாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறி இருந்தார்.
வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன்பு ஆஜராகி பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும்என்று கோரிக்கை விடுத்ததார்.
அதற்கு நீதிபதிகள், ‘சம்பவத்தில் தொடர்புடைய லாரிகள் தமிழ்நாட்டுக்குள் கைப்பற்றப்பட்டதால் சென்னை உச்ச நீதிமன்றத்தை முதலில் அணுகி மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டபஞ்சாயத்து இயக்கம் சார்பில் டிராபிக் ராமசாமி, வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அந்த வழக்கு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றபோது ரிசர்வ் வங்கி அளித்த விளக்கமாவது :-
கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு ரூ.570 கோடி பணம் எடுத்துச்செல்லப்பட்டது. இதற்கான அனுமதி ஏப்ரல் 18-ம் தேதியே ரிசர்வ் வங்கியாகிய எங்களிடம் பாரத ஸ்டேட் வங்கி பெற்றுவிட்டது.
ஏற்கனவே இதுபோன்ற பெருந்தொகை பரிமாற்றம் நடைபெற்றுள்ள நிலையில், தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்படுகிறது” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது .
மேலும் ரிசர்வ் வங்கி அளித்த அனுமதியின் பெயரிலேயே தான் ரூ.570 கோடி பணம் எடுத்துச்செல்லப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.



