தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சியைப் பிடித்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆகிறார்.
ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி-கவர்னர் ரோசய்யா வாழ்த்து தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி, தமிழக ஆளுனர் ரோசய்யா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்ட சட்டமன்ற தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளை அ.தி.மு.க. முன்னிலை பெற்றது. எனவே, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்ற தகவல் பரவியதையடுத்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிவருகிறார்கள்.
இதற்கிடையே, தமிழக ஆளுனர் ரோசய்யா, தொலைபேசியில் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இத்தகவலை மோடி அவரது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகமுதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மம்தா பானர்ஜிக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மோடி, மக்களுக்கு எப்போதும் சேவை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.



