எடப்பாடியாரின் ‘அந்த’ டிவீட் ஏன் ‘டெலிட்’ ஆனது தெரியுமா?: ஜெயக்குமார் போட்டுடைத்த ரகசியம்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

03 June25 Minister Jayakumar - 2026

மத்திய அரசு மும்மொழிக் கொள்கை அடங்கிய புதிய கல்வித் திட்டத்தை பள்ளிகளில் கொண்டுவர ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப் படுவதாகவும், ஹிந்தி எதிர்ப்பு என்ற அளவிலும் அரசியல் ரீதியாக எதிர்ப்பு கிளப்பப் பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழகத்தில் ஆளும் கட்சியினர் தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். ஆனால் மத்திய அரசு, மும்மொழிக் கொள்கை குறித்த வரைவு திட்டத்தைத்தான் கொடுத்துள்ளோம்; ஹிந்தி கட்டாயம் அல்ல, விருப்பப் பாடமாக பள்ளிகளில் வைக்கப் படும். மாணவர்கள் ஏதேனும் ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாகக் கற்க வேண்டும் என்று தெளிவு படுத்தியது.

இதற்கிடையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் உலகின் தொன்மையன மொழியான தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் விருப்பப் பாடமாக சேர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோள் பலராலும் நகைப்புடன் பார்க்கப் பட்டது. ஏற்கெனவே மத்திய அரசு, தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளும் மூன்றாவது மொழியாக அனைத்து மாநிலங்களிலும் விருப்பப் பாடமாக வைக்கப் படும் என்று கூறியிருந்தது. மேலும், தொன்மையான தமிழின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆவன செய்யும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமியின் டிவிட், வீம்புக்கு என்றே, புரிதலற்ற வகையில், அரசியல் பலனும் இல்லாமல் போடப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்தது.

இதை அடுத்து சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் முதல்வர் எடப்பாடியார். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. தற்கொலை என்பது தீர்வல்ல.

முதலமைச்சரின் சமூக வலைதள பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் போடப்பட்ட பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. அவர் கூறிய நோக்கம் தவிர்த்து தேவை இல்லாமல் சர்ச்சை கிளம்பியதால் அந்தக்கருத்து நீக்கப்பட்டது அவ்வளவுதான். தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? இந்தி தொடர்பான சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் பழனிசாமி நீக்கினார்

எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை. இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.