அதிமுக தொண்டர்கள் பொதுவெளியில், கட்சியின் நடைமுறை, தேர்தல் முடிவுகள் குறித்து எதுவும் விவாதிக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
‘புரட்சித் தலைவி அம்மா கற்றுத்தந்த அரசியல் பாடத்தை மறவாதீர்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது அதிமுக.,
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அதிமுக செயல்பாடுகள் குறித்து கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் வரவேற்கத்தக்கவை அல்ல. அதிமுக நிர்வாக முறை பற்றியோ, தேர்தல் முடிவுகள் குறித்தோ பொதுவெளியில் யாரும் கருத்து சொல்லவேண்டாம்.
முதல்வர் பதவியில் அமர நினைப்பவர்களுக்கு நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்வதுபோல அமைந்துவிடும். இதுவரை நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
முன்னாள் ஜெயலலிதா வழிகாட்டுதலில் செயல்பட்டதைப் போன்றே தொடர்ந்து செயல்பட உறுதி ஏற்போம் – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.



