பக்கத்திலயே ஒரு ஸ்லீப்பர்செல்லை வெச்சிக்கிட்டு… டிடிவி படுத்தின பாடு இருக்கே… அய்யய்யய்யோ…!

சற்றுமுன் சென்னை தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

07 June 29 Thanga tamilselvan - 2026

தினகரன் தவறாக பேசுகிறார்; இதுபோன்று பேசுவது தலைமைக்கு அழகல்ல என்று கூறியுள்ள தங்க தமிழ்ச்செல்வன், நான் அமைதியாக இருப்பேன், என்னை குறித்து பேச ஆரம்பித்தால், நான் பல விஷயங்களை பேசுவேன் என்று டிடிவி தினகரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், என்னை யாரும் பின் இருந்து இயக்கவில்லை என்று கூறியுள்ள அவர், வளர்ந்து வருவதால் என் மீது அவருக்கு பொறாமையாக கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

எந்தக் கட்சியிலும் சேர நான் விரும்பவில்லை; யாரும் என்னிடம் பேசவும் இல்லை; ‘ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள் என்று கூறியுள்ளார்ல் தங்கதமிழ்ச்செல்வன்.

தற்போது அமமுக.,வில் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்  டிடிவி தினகரனுக்கும் இடையேயான மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அமமுக.,வை விட்டு வெளியேற்றப் படுவார் தங்க தமிழ்ச்செல்வன் என்று கூறப் படுகிறது. அதற்கு ஏற்ப, தன்னை வேண்டுமானால் தினகரன் கட்சியை விட்டு விலக்கட்டுமே பார்ப்போம் என்று சவால் விடுத்தார் தங்க தமிழ்ச்செல்வன்.

06 Aug13 TTV Dinakaran - 2026இதனிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், விரைவில் அவர் கட்சியை விட்டு நீக்கப் படுவார் என்று கூறினார்.

இந்நிலையில் தன் மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், மதுரையில் செய்தியாளர்களிடம் மனம் திறந்தார். அப்போது, அமமுகவில் நிர்வாகம் சரியில்லை, தினகரனுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை  என்று உறுதிபடக் கூறினார்.

தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் குறித்து எச்சரிக்கும் வகையில் தினகரன் உதவியாளரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, டிடிவி தினகரன் வீட்டில் அமமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார் தினகரன்.

ஆலோசனை முடிந்து தினகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது,முதல் முறையாக ஒருவரை கட்சியை விட்டு நீக்க வேண்டாமே என்று பார்த்தேன்! அவர் அந்த ஆடியோ பதிவில் கூறியுள்ளது போல் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார்… என்னைக் கண்டதும் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்;கட்சியிலும் அவரைப் பற்றி பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதற்குப் பின்னரும் அவரிடம் விளக்கம் கேட்க அவசியல் இல்லை, அவரை நீக்குவதில் எனக்கு பயமும் இல்லை. அவர் வகிக்கும் கொள்கைப் பரப்பு செயலாளர் பதவிக்கு புதிதாக வேறொருவரை நியமனம் செய்யவிருக்கிறோம். அதன்பிறகு அவருக்கே புரியும். மேலும் கட்சி தொடங்கியதில் இருந்தே யாரோ ஒருவர் தங்கத் தமிழ்ச்செல்வனுடன் பேசி அவரை இவ்வாறெல்லாம் பேசச் சொல்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது என்றார்.

இந்நிலையில், தினகரன் தன்னைக் குறித்து அளித்த பேட்டிக்கு இன்று தங்கத் தமிழ்ச்செல்வன் பதிலளித்துள்ளார்.

அப்போது அவர், “வாய்ஸ் ரெக்கார்டிங் செய்து வெளியிடுவது, வீடியோவை வெளியிடுவது எல்லாம் ஒரு கட்சியின் தலைமைக்கு நல்ல பண்பு இல்லை. இங்கு நிர்வாகம் சரியில்லை! அதனால்தான் அனைவரும் கட்சியைவிட்டு செல்கின்றனர். என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால், இனிமேல் அமைதியாக மன நிறைவோடு இருப்பேன். எந்தக் கட்சியிலும் சேருவதற்கு உண்டான வேலைகளிலும் நானும் ஈடுபடவில்லை, அவர்களும் என்னை அணுகவில்லை.

இந்தச் செய்தியையுமே டிடிவி தவறாக கூறி வருகிறார். பொட்டிப் பாம்பாய் நான் அடங்கி விடுவேன் என்று கூறுவதற்கு என்ன இருக்கிறது. நான் ஒன்றும் அவரிடம் சம்பளத்துக்கு வேலை பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் அவரிடம்,  இப்போது உங்கள் பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்ய இருக்கிறார்களே என்று கேட்டனர். அதற்கு அவர்,  கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் எதற்கு என்று கூறி அந்த செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.

முன்னதாக, ஸ்லீப்பர் செல் என்ற சொல்லுக்கு பொருள் சேர்த்து அடிக்கடி அதனை ஊடகங்களில் தெரிவித்து வந்தார் டிடிவி தினகரன். அதை அடுத்து ஸ்லீப்பர் செல் என்ற சொல் மக்களிடையே பரவலாகியது. பலரும் அந்தச் சொல்லை பயன்படுத்தத் தொடங்கினர்.

இப்போது அதே டிடிவி தினகரன் தன் அருகிலேயே ஒரு ஸ்லீப்பர் செல்லை வைத்திருக்கிறாரே என்று கூறும் பலரும், இந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு டிடிவி படுத்தின பாடு இருக்கே.. கொஞ்ச நஞ்சமா என்று கிண்டல் அடிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.