தமிழர்கள் படுகொலையில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுவை இளைஞரிடம் விசாரணை

புதுச்சேரி: ஆந்திர மாநில போலீஸாரால், திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுச்சேரியில் இளைஞரிடம் விசாரணை நடத்தினர். திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் என்ற காரணம் கூறி, 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால், நாடு முழுவதும் ஆந்திர மாநில போலீஸாருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆந்திர உயர்நிதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இது விவகாரத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநில போலீசாரிடம் பிடிபட்டு தப்பி வந்த நபர்களிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவ்வாறு தப்பி வந்தவர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்ட மலை கிராமமான ஜமுனா மருதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் இளங்கோவிடம் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புதுச்சேரி இந்திரா நகரில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் வைத்து இந்த விசாரணை நடத்தப் பட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணைய துணைப் பதிவாளர் பாஸ்கர் தலைமையில் விசாரணை காலை தொடங்கி மதியம் 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் நடந்தது. இந்த விசாரணைக்குப் பின்னர் இளங்கோவை அதிகாரிகள் தங்களுடன் அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது, ஆந்திர மாநில போலீசாரின் சித்ரவதை குறித்து இளங்கோ தெரிவித்ததாகவும், பாதுகாப்பு கருதி அவரை புதுவைக்கு அழைத்து வந்து விசாரித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.