தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 18. அவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். தற்போது அதிமுக சார்பில் 12 எம்.பி.க்களும், திமுக சார்பில் 4 எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தலா ஒரு எம்.பி.யும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
தமிழக ராஜ்யசபா எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. கனிமொழி (மே 29-ல் ராஜினாமா செய்துவிட்டார்), லட்சுமணன் (அதிமுக), மைத்ரேயன் (அதிமுக), ரத்தினவேல் (அதிமுக), அர்ஜூனன் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரே அவர்கள். இந்த 6 இடங்களுக்கும் புதிய எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ராஜ்யசபா எம்.பி.க்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்களே வாக்களித்து தேர்வு செய்வார்கள். இந்தத் தேர்தல் இன்று நடைபெறும் என நாடாளுமன்றச் செயலகம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்று, மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக சார்பில் 3 பேரும், திமுக சார்பில் 3 பேரும் வெற்றிபெற வாய்ப்புள்ள நிலையில், திமுக சார்பில் 2 பேரும், ஒப்பந்தப்படி மதிமுக சார்பில் வைகோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் 2 பேரும், ஒப்பந்தப்படி பா.ம.க., சார்பில் அன்புமணியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.




