வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க.வில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடு கின்றனர். இதுதவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட பலர் போட்டியிடுகிறார்கள். அந்தந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
தேர்தல் நாள் நெருங்கி வருவதால் பிரசாரம் களை கட்டியுள்ளது. ஓட்டு எந்திரம் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் பறக்கும்படை, ஒரு நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பண பட்டுவாடா காரணமாக வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதால் இந்த முறை பண பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை தீவிரமாக சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலுர் மாவட்டம் முழுமைக்கும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் செலவின பார்வையாளராக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
83000 30526, 83000 30527 என்ற செல்போன் எண்களில் தேர்தல் தொடர்பான புகார்களை எந்த நேரத்திலும் அவர்களிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




