தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று முதல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை கருத்துப் பட்டறையுடன் பயிற்சி தொடங்குகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துப்பட்டறையை தலைமை செயலாளர் சண்முகம் தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் 3-ந்தேதி காலை 11.30 மணிக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி தொடங்குகிறது. இந்த பயிற்சியை வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தொடங்கி வைக்கிறார். சென்னை தீவுத்திடலில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 4-ந்தேதி இந்த ஒத்திகை நடைபெறுகிறது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சேர்ந்த 14 இடங்களில் ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடல், மயிலாப்பூர், சீனிவாசபுரம், கடலூர் கிள்ளை வடக்கு, கன்னியாகுமரி சின்னவிளை, நாகப்பட்டினம் வானகிரி, புதுக்கோட்டை கோட்டைப்பட்டணம், ராமநாதபுரம் தொண்டி, கல்பார், தஞ்சாவூர் காரண்குடா, தூத்துக்குடி கொம்புதுரை, திருநெல்வேலி கூடுதாழை, திருவள்ளூர் பழவேற்காடு, திருவாரூர் தில்லை விளாகம், விழுப்புரம் எக்கியர்குப்பம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் பேரிடர் பயிற்சி நடைபெறுகிறது.
பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் சென்னை தீவுத்திடலில் 3-ந்தேதி காலை 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை யிலும், 4-ந்தேதி வரையிலும், 4-ந்தேதி காலை 10.30 மணி முதல் நடைபெறும். இதனை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிடலாம்.
காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டு பேரிடர் ஒத்திகை நடைபெறவில்லை. அங்கு அத்திவரதர் தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பீதியை தவிர்க்க பேரிடர் ஒத்திகை நடத்தப்படவில்லை.




