அத்திவரதர் அருளால்தான் சிம்புவுக்கு திருமணமே…! பிரார்த்தனை செய்த தகப்பன் டி.ஆர்., உருக்கம்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

t rajendar - 2026

சிம்புவுக்கு திருமணம் நடக்க வேண்டுமென்றால்… அது அத்திவரதர் அருளால் தான் முடியும் என்று லட்சிய திமுக., தலைவரும் நடிகர் இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறினார்.

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்துக்கு வந்திருந்த டி.ராஜேந்தர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது…

40 ஆண்டு காலம் ஜலத்துக்குள் இருந்தார்; பலத்தோடு இருக்கிறார்.  ஜலத்தில் இருக்கக்கூடியவர் பலத்தோடு இருக்கிறவர்! அவர் இருந்தது ஜலத்திலே அவர் இருந்தது பலத்திலே!

அவரை பார்ப்பதற்கு வந்த அத்தனை மக்களுக்கும் அத்தனை பக்தகோடிகளுக்கும் நல்ல நலத்தை அவர் தர வேண்டும்; நல்ல மன பலத்தை அவர் தர வேண்டும்’ நல்ல உடல் நலத்தை அவர் தரவேண்டும் செல்வ வளத்தை தரவேண்டும்; பொருள் வளத்தை தரவேண்டும் !

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று ஒருவர் கேட்டார். நான் திராவிடர் கழகத்தில் இருந்து வந்தவன் அல்லன்! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்த திமுகவில் இருந்து வந்தவன்! ஆனாலும் நான் லட்சிய திமுகவின் தலைவராக இருக்கின்றேன்!

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்! எல்லாம் இறைவன் தான் என்று இன்று நான் தரிசனம் செய்ய வந்தேன்! என் மகன் சிலம்பரசன் வெளிநாட்டில் இருந்தாலும் அத்திவரதர் தரிசனத்திற்கு சென்றீர்களா அப்பா என்று கேட்டான்!

என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் பெருமாளிடம் தான் நான் கேட்க முடியும்! என் குறையை நான் யாரிடம் சொல்ல முடியும்?! பெருமாளிடம் தான் சொல்ல முடியும்! சொன்னேன்!

சாதாரணமாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்! ஆனால் என் மகனுக்கு பிடித்த, அவன் மனதுக்கு ஏற்ற, அவன் குணத்துக்கு ஏற்ற ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் அது அத்தி வரதர் அருளால்தான் முடியும்!

அத்திப் பூக்கள் போல… அத்தி எப்பொழுதாவதுதான் பூக்கும் என்பார்கள். அத்தி பூக்காமல் காய்க்க கூடியது! ஆனால் அத்தி பூத்தாற்போல் என்பார்கள்!  அத்தி வேண்டுமானால் பூக்காமல் இருக்கலாம்; ஆனால் அத்தி வரதர் வெளியே வந்துவிட்டால்…?!  அந்த உற்சவத்தைக் கண்டுவிட்ட பக்தகோடிகள் உற்சாகத்தைப் பார்க்கிறேன்.. அவர்கள் முகத்தைப் பார்க்கிறேன்.. எத்தனை மலர்கள்… எத்தனை பக்தி மலர்கள்?! என்று ஒரு தகப்பனாக தன் மகன் சிம்புவுக்கு அத்திவரதர் அருளால்தான் திருமணம் நடக்கும் என்று நம்பிக்கையுடன் உருக்கமாகச் சொன்னார் டி.ஆர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.