
“பிரும்ம வித்தைக்கும் வரகூர் உறியடிக்கும் முடிச்சு”
((வரகூர் உறியடி (இவ்வருடம் 26-08-2016)
(வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள்
வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும்
போகச் சொல்லிட்டா, எப்படி.?”)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
மறு பதிவு-
ரிக்வேத கனபாடிகள் ஒருவர் தன்னுடைய ஐந்து
மாணவர்களுடன் பெரியவாளிடம் வந்தார்.
கற்றுக் கொண்ட பாடத்தில் ஒரு பகுதியைப்
பெரியவா முன்னிலையில் சொல்லிக் காட்டச் சொன்னார்.
ஸ்வரம், அபஸ்வரமாக இருந்தது.அத்துடன் மாணவர்களுக்கு சம்ஸ்க்ருத ஞானமும் குறைவாக இருந்தது.
“குழந்தைகளுக்கு வேதம் கற்றுக் கொடுப்பது ரொம்பச் சிரமம்,இங்கிலீஷ் படிப்புக்கு அனுப்பி விடலாம்”என்றார் கனபாடிகள்.
பெரியவா அவரை உட்காரச் சொன்னார்கள்.
“கனபாடிகளே, உலகத்திலே எல்லாக் காரியங்களும்
சிரமம் தான்.!..சமையல் செய்வது சிரமம்…அடுப்பு மூட்டணும்உலை வைக்கணும்,கஞ்சி வடிக்கணும்,கறிகாய் நறுக்கணும், வேக வைக்கணும்…
“துணி தோய்ப்பது சிரமம் – தோய்த்து, அலசி,பிழிந்து,உதறி உலர்த்தணும். எல்லாமே சிரமம்.
“வரகூர் உறியடி உத்ஸவம்னு கேள்விப்பட்டிருப்பேளே.?
சறுக்கு மரம் ஏறி மேலே கட்டியிருக்கிற மூட்டையை
எடுக்கணும்.சறுக்குமரத்திலே கத்தாழை,
விளக்கெண்ணெய்பூசியிருப்பா. ஒரே வழவழப்பு. ஏறவே முடியாது….அது தவிர, பீச்சாங்குழல் மூலம் தண்ணீர் அடிப்பார்கள்! ரொம்பச் சிரமம்.
“ஆனாலும் வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி பெறணும்னு,
எக்கச்சக்கமா போட்டா போட்டி.!..கடைசியிலே யாரோ
ஒருவர் உறியடி செய்து ஜெயிப்பார்.
“கொஞ்சம் பிரயாசை எடுத்து முயற்சி பண்ணினால்,
குழந்தைகள் நன்றாக வேதம் கற்றுக் கொள்வார்கள்.
வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள்
வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும்
போகச் சொல்லிட்டா, எப்படி.?”
ரிக்வேத வாத்தியாருக்குப் பெரியவாளுடைய அறிவுரை
உயர்ந்ததாகப் பட்டது. தன் சிரமத்தைப் பாராட்டாமல்
முழு ஆர்வத்துடன் மாணவர்களுக்குப் பாடம்
சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.
ஐந்து ஆண்டுகள் கழிந்தன. வேத ரக்ஷண நிதி டிரஸ்ட்
நடத்தும் பரீக்ஷைக்கு ஐந்து மாணவர்களும் வந்து
பரீக்ஷை கொடுத்தார்கள்.
ரிக்வேத பரீக்ஷையில் ஐந்து பேருமே முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்றார்கள். அதற்கான கணிசமான
சம்பாவனையும் பெற்றார்கள்.
ஆசிரியரின் முயற்சி வீண் போகவில்லை என்பதை
சிஷ்யர்கள் நிரூபித்தார்கள்.
பெரியவாளுடைய வாக்குப் பலிதமாகாமல் போகுமா.?



