
ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாடலும் விளக்கமும்
விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்(து) உன் அடிபணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் (21)
பொருள்
பாத்திரங்கள் நிரம்பி வழியும் அளவு பாலைச் சுரக்கும் பசுக்களாகிய வள்ளல்களை ஏராளமாக வைத்திருக்கும் நந்தகோபனின் மகனாகிய கிருஷ்ணனே, எழுந்திராய்! அண்ட சராசரங்களையும் காத்து நிற்கும் தொழிலை இடைவிடாமல் செய்பவனே! பெரிதினும் பெரியோனே! ஒளிச்சுடரே! விழித்தெழுவாயாக! உன்னை விட்டு விலகியவர்கள் தங்களது சிறுமையை உணர்ந்து நிரந்தரமாக உனது திருவடிகளைச் சரணடைவது போலவே நாங்களும் உன்னைத் தஞ்சம் புகுந்தோம், உனது மேன்மையைப் போற்றிப் பாடுகிறோம்.
அருஞ்சொற்பொருள்
ஏற்ற – ஏந்திய
எதிர்பொங்கி – மேலே பொங்கி
மீதளிப்ப – நிறைந்து வழிய
மாற்றாதே – நில்லாமல், இடைவெளி இன்றி
ஆற்றப் படைத்தான் – ஏராளமாகப் பெற்றிருப்பவன் (நந்தகோபன்)
ஊற்றமுடையாய் – ஊக்கம் உடையவனே
பெரியாய் – பரப்பிரம்மமே
மாற்றார் – பகைவர்கள், இறைநாட்டம் இல்லாதவர்கள்
ஆற்றாது – கதியற்று
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர் –
நமது சூரியனைப் போலப் பல்லாயிரம் மடங்கு ஒளி கொண்டது பரப்பிரம்மம், அந்த ஒளியின் பிரதிபலிப்புதான் நாம் ஸ்ருஷ்டியில் பார்க்கும் ஒளி என்பது வேதம் தரும் விளக்கம். அறியாமையில் இருக்கும் நம் போன்றவர்களை விளங்கச் செய்யும் பொருட்டு (அறியாமையை நீக்கும் பொருட்டு) அதே பரப்பிரம்மம் அவதாரமாய் பூமிக்கு இறங்கி வந்து சைதன்ய ஸ்வரூபியாகப் பிறப்பெடுக்கிறது.
உனக்கு வலி தொலைந்து – உனக்கு முன்னே தங்கள் ஆற்றலும் வலிமையும் இழந்தவர்களாக
மாற்றார் என்பதைப் பகைவர் என்று கொள்வதைவிட இறை நாட்டம் இல்லாதவர்கள் என்று பொருள் கொள்வது சிறப்பு.
மொழி அழகு
எதிர்பொங்கி மீதளிப்ப – பால் கறக்கும்போது வள்ளல்களாகிய பசுக்கள் மிகுந்த அளவு பாலைப் பாத்திரத்தில் சொரியுமாம். தங்குதடையில்லாமல் பொழியும் பாலானது, பாத்திரத்தை அதிவேகமாக நிறைத்து எதிர்பொங்கி வழியுமாம்.
ஆன்மிகம், தத்துவம்
எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே அல்லால்
எங்கும் போய்க் கரை காணாது எரிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பு ஏறும் மாப்பறவை போன்றேனே!
கப்பலில் இருந்து கிளம்பிய பெரிய பறவை, கரையே தெரியாத அளவு பரந்து விரிந்த கடற்பரப்பில் எங்கெங்கோ அலைந்து திரிந்து, இறுதியில் கப்பலுக்கே மீண்டது போல, ஹே பரந்தாமா, உன் நினைவை விடுத்து ஏதேதோ உலகாயத வழிகளில் அல்லலுற்று, இறுதியில் உனது திருவடி மட்டுமே கதி என்பதைப் புரிந்து கொண்டு உன்னையே சரணடைந்தேன்.
– குலசேகர ஆழ்வார்

***
வள்ளல் பெரும் பசுக்கள் –
பசு பால் தருகிறது. பால் போஷாக்குள்ள உணவு. குழந்தைகளுக்குப் பால் இன்றியமையாதது. மனித ஜீவனின் வாழ்க்கையில் பாலும் பால் பொருட்களும் ஜீவாதாரமானவை. ஆனால், பசு இந்த உலகத்துக்கு இதைவிடப் பெரிய உபகாரத்தையும் செய்கிறது. உண்மையில், பசுவின் பயன் யாக அக்னியில் சொரியப்படும் நெய்யை வழங்குவதே. தூய பசுவின் நெய்தான் யாகத்துக்குப் பயன்படுவது. யாகம் என்பது நம் கண்ணுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும் இருக்கும் சகல ஜீவன்களையும் ஜடப்பொருள்களையும் காத்து ரட்சிப்பதற்காக. எனவே, யாகத்துக்குத் தேவையான நெய்யைத் தரும் பசு, உலகைக் காக்கும் பணியில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. பசுவின் உண்மையான வள்ளல் தன்மை என்பது இதுதான்.