
சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
80. நிறைகுடம் தளும்பாது!
ஸ்லோகம்:
ரத்னைராபூரிதஸ்யாபி மதலேசோஸ்தி நாம்புதே: |
முக்தா: கதிபயா: ப்ராப்ய மாதங்கா மதவிஹ்வலா : ||
பொருள்:
முத்துக்களும் ரத்தினங்களும் நிறைந்த கடல் மிகவும் கம்பீரமாக இருக்கும். தன் கும்பஸ்தலத்தில் சில முத்துக்களையே கொண்டிருக்கும் யானை மிகுந்த மதம் கொண்டு நடந்து கொள்ளும்.
விளக்கம்:
குறைகுடம் கூத்தாடும்… நிறைகுடம் தளும்பாது என்பது பழமொழி. முழுவதும் பரிமாறப்பட்ட இலை அடக்கமாக இருக்கும். வெறும் இலை காற்றில் படபடக்கும் என்பதுபோல சக்தி சாமர்த்தியம் நிறைந்தவர்கள் அடக்கத்தோடு இருப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள். ஏதோ கொஞ்சம் அறிவுள்ளவர்கள் கர்வம் தலைக்கேறி கண்மண் தெரியாமல் நடந்து கொள்வார்கள். இந்தக் கருத்தை நல்ல ஒப்புவமையோடு கவி வர்ணித்துள்ளார்.
ரத்னாகரன் எனப்படும் சமுத்திரத்தை யானையோடு ஒப்பிடும் ஸ்லோகம் இது.
யானையின் கும்பஸ்தலத்தில் முத்துக்கள் இருக்கும் என்பது கவிகளின் கூற்று.
ரத்னாகரன் என்று பெயர் பெற்ற கடலின் ஆழமான கர்ப்பம் எண்ணிலடங்கா ரத்தினங்களுக்கும் முத்துக்களுக்கும் இருப்பிடம். அதற்காக கடல் கர்வப்படுவதில்லை. மதம் கொண்டு நடந்து கொள்வதில்லை. மிக கம்பீரமாக பிரசாந்தமாக இருக்கிறது. அத்தகைய விலைமதிப்பில்லாத செல்வங்களை அடைய நினைப்பவர்கள் திறமையோடு அவற்றை பொறுக்கிக் கொள்வார்கள்.
இதற்கு மாறாக யானை நடந்து கொள்வதை கவி வர்ணித்திருப்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள சிறப்பு. யானையின் கும்பஸ்தலத்தில் சில முத்துக்கள் இருக்கும். கடலோடு ஒப்பிட்டால் அது எம்மாத்திரம்? அந்த சில முத்துக்களுக்கே அதிகம் கர்வம் கொண்டு அங்கும் இங்கும் தலையை ஆட்டி மதம் கொண்டு நடந்து கொள்கிறது. பிறருக்கு தீங்கு விளைவிக்கிறது.
இவ்விதமாக அரைகுறையாகக் கற்றவர் அந்த யானையைப் போல கர்வம் கொண்வர். முழுமையான கல்வியறிவுடைய அறிஞர்கள் கடலைப் போல கம்பீரமாக இருப்பர். மதம் அவர்களிடம் துளியும் இருக்காது.