திருப்புகழ் கதைகள் பகுதி 21
திருப்பரங்குன்றம் தலத்து ‘அருக்கு மங்கையர்’ பாடல்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
வியாக்ரபாதர் கதை (தொடர்ச்சி)
துன்பம் நீங்கி சிவயோக இன்பத்தில் வியாக்கிரபாதர் நிலைத்திருக்குங்கால், இறைவன் தேவதாரு வனத்தில் முனிவர்களுக்காகநிகழ்த்திய ஆனந்த நடனத்தின் வரலாறு தமது அகக்கண்களுக்கு வந்து தோன்ற, ஐயன் அருள் நடனம் புரியுங்கால், அத் தேவதாரு வனத்தில் அடியேன் இருக்கப் பெறாமல் இவ்விடத்தில் இருக்கப் பெற்றனனே. ஆண்டவனது திருவருள் நடனத்தை யான் காணுமாறு எவ்விதம்? என்று மிகவும் உள்ளங் கசிந்துருகி நின்றார்!
`இத் தில்லையே இந் நிலவுலகதித்திற்கு நடுநாடியாய் இருத்தலால், இதன் கண்ணேதான் ஆண்டவன் என்றும் ஐந்தொழிற் கூத்து நிகழ்த்துவன், ஆதலால் இத்தில்லைத் தலத்தின்கண் யான் புறத்தேயும், (அகத்தே ஏற்கனவே கண்டு விட்டார்) அத்திரு நடனத்தைக் காணப் பெறுவேன்” என்று தவக் காட்சியால் உணர்ந்து, அவ்விடத்திலேயே வழிபாடு புரிந்து கொண்டிருந்தார்.
தேவதாரு வனத்தின் கண் இருந்த நாற்பத்தெண்ணாயிரம் முனிவரரும் மீமாம்சை நூல் கோட்பாட்டின்படி கன்மமே (நாம்செய்யும்தொழிலே) பலனை நல்கும். பலனை நல்குவதற்கு இறைவன் வேறு ஒருவன் வேண்டுவதில்லை முதலிய கொள்கைகளை உடையாராய் இருந்தனர்.
அவர்களின் செருக்கை அகற்றி நல்வழி தருமாறு திருவுளங் கொண்டு சிவபெருமான் திருமாலோடு அவ்வனத்திற் சென்று அம்முனிவரது தவத்தையும் அவர் மனைவியரது கற்பையும் அழித்தனர். முனிவர் தெளிந்து புலி, யானை, பாம்பு, மழு முதலியவைகளை சிவன்மேலேவ, அவைகளை ஆபரணமாகவும் ஆடையாகவுங் கொண்டார். முயலகனையும் பல மந்திரங்களையும் ஏவ மந்திரங்களைச் சிலம்புகளாக அணிந்து முயலகன் மீது பயங்கர நடனத்தைப் புரிந்தனர்.
அரனாரது கொடுங்கூத்தைக் கண்ட முனிவரரும் தேவரும் அஞ்சி அபயம்புக இறைவன் அக்கொடிய நடனத்தை மாற்றி ஆனந்தத் தாண்டவஞ் செய்தனர். முனிவரரது ஆணவ வலிகளெல்லாம் தம் திருவடிக் கீழ் கிடக்கும் முயலகன்பால் வந்தொடுங்க அருள் செய்து மறைந்தனர்.
பின்னர் நாராயணர் தம் இருக்கை சேர்ந்து இறைவன் செய்தருளிய ஆனந்தக் கூத்தை நினைந்து பெருங்களிப்பால் கண் துயிலாதிருந்து தமது அணையான ஆதிசேடர்க்கு அத் திருநடனத்தின் திறத்தை விளம்ப, ஆதிசேடர் அதனைக் கேட்டு இறைவன் திருநடனத்தைக் காணும் விழைவு மேற்பட்டு கண்ணீர் ததும்பி நிற்க, அது கண்ட மதுசூதனர் “நீர் இறைவனுக்கு அன்பராயின்மையின் இனி நீர் தவம் புரிதலே இயல்பு” என்று விடை தந்து அனுப்ப, ஆதிசேடர் கயிலைமலைச் சார்ந்து அம்மலைக்கு அருகில் சிவபெருமானை நினைத்துப் பெருந்தவம் ஆற்றினர்.
அவர் முன் முக்கண் மூர்த்தி தோன்றி, “அன்ப! யாம் தேவதாரு வனத்தின் கண் திருநடனம் புரிகையில் அவ்விடம் நிலத்திற்கு நடு அன்மையின், அஃது அசைந்தது. ஆதலால் அருட் கூத்தை ஆங்கு இயற்றாது விடுத்தோம். இப்போது இங்கு அதனை இயற்றுதற்கும் இது தக்க இடமன்று. அதனைச் செய்தற்குரிய தில்லை மன்றத்தின்கண்ணே நமது ஐந்தொழில் ஆனந்த நடனம் என்றும் நடைபெறா நிற்கும்.
அது ஏனென்றால் உடம்பும் உலகமும் அமைப்பில் ஒப்பனவாம். உடம்பின் உள்ளோடும் இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளில் சுழுமுனை நாடி உடம்பின் நடுவிலோடும். அங்ஙனமே இந்நிலத்திற்குச் சுழுமுனை நாடியும் தில்லைக்கு நேரே ஓடும். உடம்பின்கண் அந்நடு நாடியின் நடுவே விளங்கும் இதயத் தாமரையினுள் ஞான ஆகாசத்திலே யாம் ஓவாது அருள் நடனம் புரிவது போலவே, புறத்தே தில்லைத்தலத்தில் சிவலிங்கத்திற்குத் தெற்கேயுள்ள அருள் அம்பலத்தின்கண் என்றும் இடையறாது திருநடனம் இயற்றுவோம். அதனை அங்கே காணும் ஞானக்கண்ணுடையார் பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவர்.
ஆதலால், நீ இவ்வுருவை ஒழித்து, அத்திரி முனிவர் மனைவியிடத்தே முன்னொருகால் ஐந்தலைச் சிறு பாம்பாய் வந்தனையன்றோ? அவ்வுருவத்தினையே எடுத்து தில்லைத் தலத்தின்கண் சென்று இருப்பாயாக. அங்கு நின்னைப்போல் திருநடன தரிசனங் காண விழைந்து தவமியற்றும் வியாக்ரபாத முனிவனுக்கும் நினக்கும் தைப்பூசத்தன்று சிற்சபையில் திருநடனத்தைக் காட்டி அருள்வோம்” என்று உரைத்து மறைந்தருளினர்.
பதஞ்சலியார் இறைவன் திருமொழிப்படியே தில்லவனஞ் சேர்ந்து புலிப்பாதருடன் அளவளாவி அருந்தவமியற்றி நின்றனர். குன்றவில்லி அவ்விரு முனிவரருக்கும் குறித்த நாளில் திருநடனம் புரிந்தருளினர்.