திருப்புகழ் கதைகள் பகுதி 42
பொருப்புறும் (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
முருகப் பெருமான் வள்ளி நாயகியைத் திருமணம் புரிந்த வரலாறு
தீயவை என்பனவற்றைக் கனவிலும் நினையாத தூய மாந்தர் வாழ்கின்ற தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது.
அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.
கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, வள்ளிமலையில் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.
ஆங்கு ஒரு பக்கத்தில், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது.
குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது. அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான்.
குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர்.
மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள். முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்த வரலாற்றை நாளைத் தொடரலாம்.