
ஜூன் 3 – இன்று உலக சைக்கிள் தினம்!
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று உலக சைக்கிள் தினம். ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகிற ஒரு நாள்.
ஏனெனில் சைக்கிள் ஓட்டுதல் அனைத்து வயதினருக்கும் மிகப்பெரிய சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். COVID-19 தொற்றுநோய்க்கு இடையில் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னதாக, சைக்கிள் ஓட்டுதலை வலியுறுத்தி ஒரு தினத்தை அனுசரிப்பது நல்லது.
இது சிறந்த போக்குவரத்து முறை, மலிவான போக்குவரத்து முறை, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, மேலும் சைக்கிள் ஊட்டுதல் ஆரோக்கியமானது. இதனைக் குறிப்பிட உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இன்றைய தினம் சைக்கிள் தினமாக அனுசரிக்கப் படுகிறது.
“நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதலுக்கான பாதுகாப்பான உள்கட்டமைப்பு அதிக சுகாதார சமத்துவத்தை அடைவதற்கான ஒரு பாதையாகும்.” என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சைக்கிள் ஓட்டுவது நேரத்தையும் மந்தமான போக்குவரத்து நெரிசலையும் மிச்சப்படுத்துகிறது என்பதை தங்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தும் பயணிகள் தவறாமல் ஒப்புக் கொள்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தனி சைக்கிள் ஓட்டுதல் பாதை உள்ளது.
உலக சைக்கிள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
அதிகரித்த சைக்கிள் பயன்பாடு என்பது குறைந்த பசுங்குடில் வாயு உமிழ்வைக் குறைக்க பங்களிக்கிறது,
சைக்கிள் ஓட்டுதல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது: சைக்கிள் ஓட்டுதல் இருதய உடற்பயிற்சி, தசை வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கு வழிவகுக்கிறது.
ஒரு குழுவாக சைக்கிள் ஓட்டும்போது இது கூட்டு இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சைக்கிள் ஓட்டுதல் பணத்தை மிச்சப்படுத்துகிறது. சைக்கிள் ஓட்டுதல் உள்ளூர் சூழல் மற்றும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி பற்றிய விழிப்புணர்வுக்கு உதவுகிறது.
‘மிதிவண்டி’ (தமிழகப் பேச்சு வழக்கு: சைக்கிள்) மிதிக்கட்டைகளில் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கரங்கள் ஒரே தளத்தில் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன் சக்கரத்தை இடமும் வலமுமாக கையால் திருப்பும் படி அமைப்புள்ள கட்டுப்பாட்டுத் தண்டு இருக்கும்.

மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின. தற்பொழுது உலகெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவிலும் நெதர்லாந்திலும் போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது.
உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை. போக்குவரத்து தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் உடல் உறுதியை காப்பதற்காகவும் பாதுகாவற் பணிப் பயன்பாடுகளுக்காகவும் அஞ்சல் சேவைகளுக்கும் மிதிவண்டிகள் பயன்படுகின்றன.
வரலாறு
பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவர் பொழுது போக்காக வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டார்.
ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி. 1791ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். செலிரிஃபைரே (The Celerifere) என்று அழைக்கப்பட்ட இந்தவகை மிதிவண்டியில் கைத்திருப்பி, மிதிஇயக்கி, பிரேக் எனப்படும் தடை என எதுவும் கிடையாது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வு மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817ஆம் ஆண்டு ஒரு மிதிவண்டியை வடிவமைத்தார்.

ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டியில் தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் கைதிருப்பி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது.
உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான். லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி மிதிவண்டி தயாரிக்க முயற்சித்தார். கார்ல் வோன் ட்ரைஸின் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார்.
இதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகில் முதன் முதலில் மிதி இயக்கி (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதிவன்டியை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் வடிவமைத்தார்.

ஆகையால்தான் இன்று மிதிவண்டியைக் கண்டறிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி , தடை மற்றும் மிதிஇயக்கி ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான மிதிவண்டி ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார். இதில் பின்புறச்சக்கரம் முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி, தடை மற்றும் மிதிஇயக்கி ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது.
தையல் இயந்திரத்தில் உள்ள மிதி இயக்கியை போன்று கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு மிதிவண்டி இயங்கியது. அதனைதொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரும்பு வேலை செய்யும் கொல்லர் இறங்கினார்.
இவரது கடும் உழைப்பின் பயனாக 1863ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதிஇயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த இயக்கியைச் மிதித்துச் சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு மிதிவண்டி இயங்கும்படி வடிவமைக்கப் பட்டிருந்தது.
இதற்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பைக் கண்டு 1868ஆம் ஆண்டு மிசாக்ஸ் கம்பெனி என்ற பெயரில் மிதிவண்டி நிறுவனம் ஒன்றை துவக்கினார். இது உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் துவங்கப்பட்ட உலகின் முதல் மிதிவண்டி நிறுவனம் ஆகும்.
பின்னர் ரிம், ஸ்போக்ஸ் கம்பிகள் தயாரிக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் முன்புறச்சக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறச்சக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த மிதிவண்டியும் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட மிதிவன்டிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.
பின்னர் பற்சக்கரம், இயக்கிச் சங்கிலி, இரப்பர் சக்கரம் மற்றும் காற்றுக்குழாய் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ‘இன்றைய நவீன சைக்கிளின் தந்தை’ என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த சான் கெம்பு இசுட்டார்லி (John Kemp Starley) என்பவர் புதிய மிதிவண்டி ஒன்றை 1885ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார்.
தற்போது மலையேறுவதற்கு என ஒரு வகை மிதிவண்டியும், கியர் வைத்த மிதிவண்டிகளும், விளையாட்டிற்கென தனி மிதிவண்டியும் தயாரிக்கப் படுகின்றன. மிதிவண்டிப் பயன்பாட்டை அதிகரித்தால் நம் உடலுக்கும் நல்லது; இந்த உலகிற்கும் நல்லது.