
திருப்புகழ் கதைகள் பகுதி 51
அருணமணி மேவு (திருச்செந்தூர்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கஜேந்திரன், முற்பிறப்பில், பாண்டிய நாட்டு அரசனாக, இந்திரத்யும்னன் என்ற பெயருடன் அரசாண்டு வந்தான். ஸ்ரீமந் நாராயணனிடம் மிகுந்த பக்தி கொண்டவனாக, எப்போதும், ஸ்ரீ விஷ்ணுவின் திருவுருவையே தியானிப்பவனாக இருந்து வந்தான். ஒரு முறை இந்திரத்யும்னன், மலய பர்வதம் என்னும் இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, தவக்கோலத்தில், ஸ்ரீ ஹரியை ஆராதித்து வந்தான்.
அவ்வாறு ஆராதிக்கும் காலத்தில் மௌன விரதமும் பூண்டிருந்தான். அச்சமயத்தில், அங்கு வந்த அகத்திய மாமுனிவர், அரசன் தன்னை வரவேற்காது நிஷ்டையில் இருப்பதைப் பார்த்து கோபமுற்றார்.
எத்தனை நியமங்களை ஒருவர் கைக்கொண்டாலும், மகான்களை வரவேற்று உபசரிப்பதற்காக அவற்றைக் கைவிடலாம். மகான்களை வரவற்பதும் உபசரிப்பதும் ‘விசேஷ தர்மத்தில்’ வருவதால் அதற்காக ‘சாமான்ய தர்மமான’ மௌன விரதத்தை கை விடுவது பாவமாகாது.
இதனை அறியாத இந்திரத்யும்னன், மௌன விரதத்தையே அனுஷ்டித்ததால், அகத்தியர், மன்னன் தம்மை அவமதித்ததாக எண்ணி, ‘யானை போல் ஜடமான புத்தியை உடைய நீ, யானையாகவே பிறவி எடுக்கக் கடவது’ என்று சபித்து விட்டார். எம்பெருமானையை நினைத்துக் கொண்டிருந்த இந்திரத்யும்னன், அந்நினைவின் கூட்டுறவுடனேயே, யானையரசனாகப் பிறவி எடுத்தான்.
சாபத்தின் காரணமாக, யானையாகப் பிறவி எடுத்த இந்திரத்யும்னன், கஜேந்திரன் என்ற பெயருடன் விளங்கினான். திரிகூடம் என்னும் மலையில் இருந்த ஒரு யானைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தது கஜேந்திரன். முற்பிறவியில் பகவத் சிந்தனையில் இருந்ததன் காரணமாக, ஒளி பொருந்திய தேகமும் அபரிமிதமான பலமும், தேஜஸூம் கொண்டதாக விளங்கியது கஜேந்திரன்.
அந்த மலையின் தாழ்வான பகுதியில், வருணபகவானுக்கு உரியதான, ருதுமத் எனப் பெயர் கொண்ட ஒரு உத்தியான வனம் இருந்தது. கஜேந்திரனும் அவனது யானைக் கூட்டமும், அந்த வனத்தில் இருந்த மரம் செடி கொடிகளை எல்லாம், சிதறடித்துக் கொண்டு சஞ்சாரம் செய்து வந்த போது, தாகம் மேலிட்டதன் காரணத்தால், அருகிருந்த ஒரு தடாகக் கரையை அடைந்தன.
தாமரை மலர்கள் நிறைந்த அந்த குளத்தில், கஜேந்திரனும் மற்ற யானைகளும், துதிக்கையால், நீரை எடுத்து அருந்துவதோடு மட்டும் அல்லாமல், மற்ற யானைகளின் மேல் வாரி இறைத்தும், நீரை மேல் நோக்கிப் பொழிந்தும் விளையாடத் தொடங்கின. கஜேந்திரன் மோட்சமடைவதற்கு காரணமான நிகழ்வுகள், இதிலிருந்தே தொடங்குகின்றன.
அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு முதலை, சினம் கொண்டு, கஜேந்திரனின் காலைப் பிடித்து, பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அந்த முதலையும் ஒரு சாபத்தின் காரணமாகவே இந்தப் பிறவியை அடைந்து இருந்தது. ஹூஹூ என்ற பெயருடைய ஒரு கந்தர்வன், தம் மனைவிமாருடன், இந்தக் குளக்கரையில் நீராடிய போது, நீருள் இருந்து தவம் புரிந்து வந்த தேவலர் என்ற முனிவரின் காலைப் பற்றி அறியாமல் இழுத்துவிட்டான்.

தவம் கலைந்த முனிவர், கடும் கோபத்துடன், முதலையாகப் பிறக்க வேண்டுமென்று அவனுக்கு சாபம் கொடுத்து விட்டார். அறியாமல் செய்த தவறாகையால், பக்த சிரோமணி ஒருவருடைய காலைப் பற்றும் போது விமோசனம் கிடைக்கும் என்று சாப விமோசனமும் அருளினார்.
தன் பலம் முழுவதையும் திரட்டி, வந்த துன்பத்தை விரட்ட முயற்சி செய்து, முடியாமல் போகவும், இறுதியில், ‘என் செயலாவது யாதொன்றுமில்லை’ என்ற உண்மை உணர்ந்து, தன் முயற்சியும், தன் அறிவின் செயல்பாடும், ஓர் எல்லைக்குட்பட்டதே என்பதை அனுபவபூர்வமாக அறிந்த பின்னால், ‘உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்’ என்று பகவானின் திருவடிகளில் சரணாகதி அடைபவர்கள் நிரந்தரமான இன்பத்தை நிச்சயம் அடைகிறார்கள்.
‘கஜேந்திரன், ஒரு நாள் இருநாள் அல்ல, சுமார் ஆயிரம் ஆண்டு காலம் வரை தன் போராட்டத்தைத் தொடர்ந்தது. தங்கள் தலைவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு, அக்கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், மனம் உருகி, வேதனை தாங்காமல் கதறின. பலங்கொண்ட மட்டும் கஜேந்திரனை இழுத்துப் பார்த்தன. அவற்றால் முடியவில்லை. இறுதியில், பெண்யானைகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தம் தலைவனின் நிலையை எண்ணி கண்ணீர் பெருக்கியவாறு அந்த இடம் விட்டு அகன்றன’ என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
கஜேந்திரன் என்னவானான்? நாளைக் காணலாம்.