
திருப்புகழ்க் கதைகள் 116
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
படர்புவியின் – திருச்செந்தூர்
தமிழிலக்கிய வரலாறு
இத்திருப்புகழில் இடம்பெறும் பின்வரும் வரிகளில் அருணகிரியார் தமிழிலக்கிய வரலாற்றினை சொல்லிவிடுகிறார்.
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி …… சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் ……சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி …… சண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு லாவு மால கந்தைத …… விர்ந்திடாதோ
கல்லூரியில் படித்தவர்கள் தமிழை ஒரு பாடமாகப் பெற்றிருப்பர். அவர்களுக்கு தமிழிலக்கிய வரலாறு ஒரு பாடமாக இருந்திருக்கும். தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு. அதிலே பழங்காலம் என்பதில் சங்க இலக்கிய காலம் (கிமு 500 – கிபி 300), சங்கம் மருவிய காலம் அல்லது நீதி இலக்கிய காலம் (கிபி 300 – கிபி 500) ஆகியவை அடங்கும். இதன் பின்னர் காப்பிய காலம் வருகின்றது. இதன் பின்னர் வருகின்ற இடைக்காலம் – பக்தி இலக்கியம் (கிபி 700 – கிபி 900); காப்பிய இலக்கியம் (சிலப்பதிகாரம், மணிமேகலை தவிர) (கிபி 900 கிபி 1200); உரைநூல்கள் (கிபி 1200 – கிபி 1500); புராண இலக்கியம் (கிபி 1500 – கிபி 1800) ஆகியவை அடங்கும். புராண இலக்கியத்தில் புராணங்கள், தலபுராணங்கள் ஆகியவை உள்ளன. இவற்றுடன் இஸ்லாமிய தமிழ் இலக்கியமும் இதில் அடங்கும்.
இதன் பின்னர் வருகின்ற இக்காலம் என்ற கால வகைப்பாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியங்களான கிறிஸ்தவ தமிழ் இலக்கியம், புதினம்; இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களான கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை; இருபத்தோராம் நூற்றாண்டு இலக்கியங்களான அறிவியல் தமிழ், கணினித் தமிழ் ஆகியவற்றை அடக்கலாம்.
அருணகிரியார் ‘உரை பழுதில் பெறு சீல நூல்கள்’ என்று குற்றமில்லாத சொற்களைப் பெற்ற ஒழுக்க நூல்கள். பதினெண் கீழ்க்கணக்கு என்ற நூல்கள் ஆகியவற்றாய்க் குறிப்பிடுகிறார். ‘சங்க பாடல் பநுவல்’ என்று சொல்வதன் மூலம் சங்க கால நூல்களைக் குறிப்பிடுகிறார். சங்ககாலத்தில் எழுந்த நூல்களில் பல கடல் கோளால் அழிந்துபட்டன. எஞ்சி நின்ற நூல்கள் சில. இப்போது உள்ளவை தொல்காப்பியம், பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய நூல்கள்.

மேலும் கதை காவ்யம் என்பதன் மூலம் கதை-வரலாற்று நூல்களைக் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெருங்காப்பியங்களைக் குறிப்பிடுகிறார். பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
இதன் பின்னர் அருணகிரியார் ‘எண்ணெண் கலை’ ஆகும். எண்ணென் கலை என்று அவர் அறுபத்து நான்கு கலைகளைக் குறிப்பிடுகிறார். அவையாவன:
அக்கர இலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாத்திரம், ஜோதிட சாத்திரம், தரும சாத்திரம், யோக சாத்திரம், மந்திர சாத்திரம், சகுன சாத்திரம், சிற்ப சாத்திரம், வைத்திய சாத்திரம், உருவசாத்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சத்தப்பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரபரீட்சை, கனக பரீட்சை, இரத பரீட்சை, கசபரீட்சை, அசுவ பரீட்சை, இரத்னபரீட்சை, பூமிபரீட்சை, சங்கிராமவிலக்கணம், மல்யுத்தம், ஆகருடணம், உச்சாடணம், வித்துவேடணம், மதனசாத்திரம், மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தருவவாதம், பைப்பீல வாதம், கௌத்துகவாதம், தாதுவாதம், காருடம், நட்டம், முட்டி ஆகாயப் பிரவேசம், ஆகாயகமனம், பரகாயப் பிரவேசம், அதிரிசியம், இந்திரசாலம், மகேந்திரசாலம், அக்கினித்தம்பம், சலத்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கன்னத்தம்பம், கட்கத்தம்பம், அவத்தைப் பிரயோகம்.