திருப்புகழ் கதைகள்: மூப்புற்று… செவி கேட்பற்று… செயல் தடுமாறி!

Published:

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 131
மூப்புற்றுச் செவி – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளியுள்ள தொண்ணூற்றிநான்காவது திருப்புகழ் ‘மூப்புற்றுச் செவி’ எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும்.

“சிவகுருவே, வள்ளிமணவாளா, செந்திலாண்டவா, யம வாதனை இன்றி நின் பதமலரில் சேர்த்தருள்வாய்” என அருணகிரிநாதர் முருகப் பெருமானை இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல் …… தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளி …… யிளையோடும்
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி …… ரலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
கூட்டிச் சற்றருள் …… புரிவாயே
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர் …… குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
காப்புக் குத்திர …… மொழிவோனே
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர …… முருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
வாய்க்குட் பொற்பமர் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – உலகிற்குக் காவலாக அமைந்துள்ள பொன் மேரு கிரியை வில்லாக வளைத்து (தேவர்களுடைய) பகைவராகிய முப்புரத்தாருடைய அரண் மதிலை அழித்த சிவபிரானுடைய குருநாதரே. கானகத்தில் வாழ்ந்த வள்ளியம்மையிடம் “என்னைக் காப்பாற்றுவாய்”என்று குறை இரப்பது போன்ற வஞ்சமொழிகளைப் புகன்றவரே.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

நலம் பல வாய்ந்த தமிழின் அகப்பொருட் சூத்திரத்தின் உண்மையுரை இது என்று தெளிவுபடுத்திய அழகிய முருகக் கடவுளே. சொல்லுக்கும் அறிவுக்கும் எட்டாதவரே. புனித தீர்த்தத் துறைகள் சூழ்ந்துள்ள கடற் கரையின் கண் திருச்செந்தூரில் அழகுடன் அமர்ந்துள்ள பெருமிதம் உடையவரே.

murugan thiruchendur
murugan thiruchendur

முதுமைப் பருவம் அடைந்து, காது கேளாது, பெருமூச்சு விட்டுக் கொண்டு, செயல்கள் தடுமாற்றமுற்று, கோபச் சொற்கள் பேசி, மூக்கில் சளியும், நெஞ்சில் கோழையும் ஒன்று கூடி வெளிப்பட, துன்பத்தினால் பித்தம் ஏறச் செய்யும் அவ்வுடம்பில் புகுந்து, உயிர் அலைவதற்கு முன்னம், இயம வாதனையைத் தவிர்த்து உமது பொற்பாத கமலத்துள் சேர்த்துச் சிறிது அடியேற்கு அருள்புரிவீர். – என்பதாகும். இத்திருப்புகழின்

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர …… முருகோனே

என்ற வரிகளில் அருணகிரியார் இறையனார் அகப்பொருள் உரை பற்றிய கதை ஒன்றினைச் சொல்கிறார். தமிழ், எல்லா விதமான நலன்களும் வாய்க்கப் பெற்றது. மதுரையில் எழுந்தருளிய சொக்கநாதப் பெருமான் இத்தமிழில் ‘அகப் பொருட் சூத்திரம் அறுபது’ தந்து அருளினார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

“இறையனார் அகப்பொருள்”என்ற அந்நூலுக்கு சங்கப் புலவர்கள் உரை கண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாம் கண்ட உரையே சிறந்தது என்று கலகம் விளைத்தார்கள். அப்போது முருகவேள், செட்டி மகனாகிய உருத்திர சன்மர் மூலம் நக்கீரர் உரையே சிறந்தது என்று தெளிவுபடுத்தி அருள் புரிந்தார். இந்த வரலாற்றை இந்த வரிகள் குறிப்பிடுகின்றன.

இதனை ‘சீரான கோல கால நவமணி’ எனத் தொடங்கும் ‘விராலிமலை’ திருப்புகழிலும் அருணகிரியார் பாடியிருக்கிறார்.

“ஏர்ஆரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி ஆடும் இறையவர்
ஏழ்ஏழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடுஆய ஏமர்போல வணிகரில்
ஊடாடி,ஆல வாயில் விதிசெய்த
லீலா விசார தீர வரதர குருநாதா

இறையனார் அகப்பொருள் வந்த வரலாற்றினை நாளைக் காணலாம்.

Related articles

Recent articles

spot_img