திருப்புகழ்க் கதைகள் 160
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
ஆறுமுகம் ஆறுமுகம்– பழநி
திருநீறு தயார் செய்யும் முறை
நல்ல இளமையான ஆரோக்கியமான பசுவின் சாணத்தினை, சாணம் இடும்போது தாமரை இலையில் ஏந்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இம்முறை பௌடிகம் என்று கூறப்படுகிறது. இவ்விதம் பெறப்பட்ட சாணத்தை சுத்தமான இடத்தில் வைத்து அதனுடன் பசும் பால், தயிர், நெய், பன்னீர், கோமியம் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து கைகளால் பிசைய வேண்டும். (அதாவது வீட்டில் பசு வளர்க்கவேண்டும் என்பது முக்கியமான செய்தி)
பின் உருண்டைகளாக திரட்டி ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு உருண்டையிலும் சிறிய பள்ளத்தை உண்டாக்க வேண்டும். இப்பள்ளமானது உருண்டை நெருப்பில் நன்கு வெந்து பக்குவமாக எடுக்க வசதியாக இருக்கும். இவ்வுருண்டைகளுக்கு முட்டகம் என்று பெயர். பின்னர் பக்கத்திலுள்ள வயல்வெளியில் சம்பா நெற்பதரைக் கொட்டி அதனுள் முட்டகங்களை அடுக்கி வைத்து அவற்றின் மேலும் நெற்பதரை பரப்பி நெருப்பு வைக்க வேண்டும். இவ்விதம் வைக்கப்பட்ட நெருப்பானது மூண்டு கொண்டே இருக்கும். ஒரு வாரம் சென்ற பார்த்தால் முட்டகங்கள் எல்லாம் நன்றாக வெந்து வெண்மைநிற உருண்டைகளாக இருக்கும்.
சம்பா பருவம் என்பது சூன் முதல் நவம்பர் வரையிலான காலம். குறுவை என்பது நவம்பர் முதல் மேவரையிலான காலம். சம்பா பருவத்தில் நெற்பயிரின் பதர்கள் அல்லது உமி கொண்டு முட்டகங்களை எரிக்கவேண்டும்.
சங்கினைத் தவிர எல்லா பொருளையும் நெருப்பில் இட்டால் கருமையாகி விடும். ஆனால் முட்டகங்கள் வெண்மையாகி விடும். வெள்ளையாக இருக்கும் திருநீறு உருண்டைகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனையவற்றை தவிர்த்து விடவும். பின் அம்மிக்குழவியை சுத்தம் செய்து ஈரம் போகத் துடைத்து அதனைக் கொண்டு முட்டகங்களை பொடி செய்ய வேண்டும். இவ்விதம் பொடி செய்யப்பட்ட திருநீறினை சல்லடையில் இட்டு சலித்து பின் அதனை வெள்ளைத் துணியில் போட்டு சலித்து எடுக்க வேண்டும்.
இதனை பன்னீர் தெளித்து காற்றாட விடவேண்டும். இத்துடன் உலர்ந்த மல்லிகை, பாதிரி, பிச்சி போன்ற மலர்களைப் போட்டு வைக்கவும். இக்காலத்தில் திருநீற்றுடன் ஜவ்வாதை வாசனைக்காகச் சேர்க்கிறார்கள். இத்திருநீறினை மண்பானைகளில் கொட்டி பானையின் வாயினை வெள்ளைத்துணியால் கட்டிவிட வேண்டும். இப்பானையை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும்.
சிவாய நம அல்லது நம சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி கிழக்கு அல்லது வடக்கு திசையைநோக்கி நின்று திருநீறினை அணிய வேண்டும். இவ்விதமாக நின்று கொண்டு அண்ணாந்த நிலையில் வலக்கை நடுவிரல்கள் மூன்றாலும் எடுத்து நிலத்தில் துளியும் சிந்தாத வண்ணம் அணிய வேண்டும். திருநீறு அணியும்போது ‘திரியம்பக மந்திரம்’ சொல்லியவாறே அணியும் வழக்கமும் உண்டு. அந்த மந்திரமாவது,
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ர்த்யோர் முக்ஷீய மாம்ர்தாத்
இம்மந்திரம் ருக்வேதத்தில் வருகின்ற மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும். இதன் சுருக்கமான அர்த்தம் – ஓம். நாங்கள் முக்கண்ணுடைய இறைவனை அன்போடு வேண்டுகிறோம். உங்களின் திருவருளால் எங்களின் வாழ்வு என்றுமே எந்தக் குறைகளும் இல்லாமல் நறுமணம் வீசுகின்றது. எங்களை நோய்களில் இருந்து காத்து, மரணப்பிடியில் இருந்து மீட்டு அருள்புரியுங்கள், இறைவா. இறப்பு நிச்சயம் என்றால், எங்களுக்கு மோக்ஷம் தந்து என்றுமே உங்களோடு இணைந்திருக்க அருள்செய்யுங்கள்.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
என்ற திருநீற்றுப் பதிகப் பாடலைப் பாடியும் இட்டுக்கொள்ளலாம். அல்லது ஆதிசங்கரர் இயற்றிய சுப்ரமண்ய புஜங்க ஸ்தொத்திரத்தில் வருகின்ற ஒரு ஸ்லோகமான
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த: |
பிஷாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே ||
என்ற ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டே அணியலாம். அல்லது அருணகிரியார் சொல்வது போல ‘ஆறுமுகம், ஆறுமுகம்’ என ஆறுமுறை சொல்லிகொண்டே திருநீற்றை அணியலாம்.