பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 14, கண்ணன் – என் அரசன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி. . .
நாமெல்லாம் அவனது பலத்தை நம்பி இருக்கையில், இவனோ வெட்கமின்றி பதுங்கிக் கிடப்பான், சிலநேரம் தீமைகளை ஒழித்துக்கட்டவும் செய்வான், சில நேரம் ஓடி ஒளிந்துகொண்டு சிறுமைப் படுவான். தந்திரங்களும் நன்கு செய்வான், செளரியங்களையும் ஏற்படுத்திக் கொள்வான், மந்திரசக்தியையும் காட்டுவான், வலிமை இல்லாமல் சிறுமையிலும் வாழ்வான்.
சரியான காலம் வந்து சேரும்போது, ஓர் கணத்தில் புதிய மனிதனாக உருவெடுத்து விடுவான். ஆலகால விஷத்தைப் போல இவ்வுலகமே அஞ்சி நடுங்கி ஆடும்படி சீறுவான். வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் பகை வெந்து போகும்படி பொசுக்கி விடுவான். உலகமும் வானமும் ஆயிரமாண்டுகள் பட்ட துன்பங்களை நொடியில் மாற்றிவிடுவான்.
கையிலுள்ள சக்கரத்தை ஓர் கணத்தில் எடுப்பான், அடுத்த கணம் பாரில் தர்மம் ஓங்கி வளர்ந்து விடும். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரம் ஏதேனும் உண்டோ? இல்லை கண்ணிமைப்பில் இவை முடிந்துவிடும். இந்த குறுகிய காலத்துக்குள் பகையை ஒழித்துக் கட்டிவிடுவான். கண்ணன் எனும் எங்கள் அரசனின் புகழினை கவிதையால் வடித்து எந்தக் காலமும் போற்றுவேன்.
திண்ணை வாசல் பெருக்க வந்த என்னை இந்த தேசம் போற்றும் வகையில் தன் மந்திரியாக நியமித்தான். அன்றாடச் சோற்றுக்கு ஏவல் செய்ய வந்த எனக்கு, நிகரற்ற பெரும் செல்வத்தைக் கொடுத்து உதவினான். வித்தை யொன்றும் கற்காத எனக்கு வேத நுட்பங்கள் யாவையும் விளங்கிடுமாறு செய்தான்.
கண்ணன் எனும் இந்த அருளாளனின் அருள் வாழ்க. கலியின் கொடுமை அழிந்து இந்த பூமியின் பெருமை வாழ்க. கண்ணன் எனும் அண்ணலின் அருள் பெற்ற நாடு அவலமெல்லாம் நீங்கி புகழில் உயரட்டும்!
அடுத்த கண்ணன் பாட்டு கண்ணன் – என் சீடன் என்ற தலைப்பில் இடம்பெறுவதாகும். முதலில் பாடலைக் காண்போம். இப்பாடல் ஆசிரியப்பா வகையில் அமைந்தது
யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்,
என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்,
என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால் … 5
என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்,
யான்சொலுங் கவிதை என்மதி யளவை
இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று
கருதுவான் போலவும், கண்ணக் கள்வன். … 10
சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!
பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்து
பட்டன தொல்லை பலபெரும் பாரதம்;
உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும்,
தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் … 15
சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்,
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள
மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி
இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் … 20
தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு,
மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து,
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்,
பல்வகை யால்அகப் பற்றுறச் செய்தான்;
வெறும்வாய் மெல்லுங் கிழவிக் கிஃதோர் … 25
அவலாய்மூண்டது; யானுமங் கவனை
உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய்,
”இன்னது செய்திடேல், இவரோடு பழகேல்,
இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல்,
இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், … 30
இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்”
எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,
ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்.
கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம்
எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் … 35
நெறியினக் கெல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பா னாயினன். நானிலத் தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமாக் கொண்ட சிறுமதி யுடையேன்,
கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் … 40
விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்
தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்
இகழுமிக் கவனாய் என்மனம் வருந்த
நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் … 45
இப்பாடலின் தொடர்ச்சியை நாளை காணலாம்.