திருப்புகழ்க் கதைகள் 162
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இரவி என வடவை என – பழநி
ஸ்ரீகிருஷ்ண லீலை 2
முடியில் மயிற்பீலி; மஞ்சள் நிற ஆடை (பீதாம்பரன்); துளப மாலை; கையில் குழல்; அதில் எழுப்பும் ஓசை எங்கும் இன்பத்தை மூட்டுகிறது. அவன் குழல் இசை கேட்டு மயங்காதார் இல்லை; அந்த வகையில் அவன் ஒர் இசைக் கலைஞனாய் மற்றவர்களை மகிழ்விக்கிறான்; மகளிரோடு சேர்ந்து, குரவைக் கூத்து ஆடி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.
அவன் சகடம் உதைத்ததும், பூதனையின் பால் உண்டதும், அவள் உயிரைச் சேரப் பருகியதும், மருத மரங்களை வீழ்த்தியதும், அசுரர்கள் பலரை இனம் தெரிந்து அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்ததும், இந்திரனுக்கு இட்ட சோறும் கறியும் தான் ஆயர்சிறுவர்களோடு உண்டதும், மலைப்பாம்பினைப் பிளந்ததும், நாரை வாயைக் கிழித்ததும், தேனுகளை விளவில் எறிந்து அழித்ததும் எல்லாம் திவ்விய பிரபந்தத்தில் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன.
கண்ணனது அவதாரப் பெருமையைப் பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பாடல் நன்கு தெளிவுறுத்தும். கண்ணன் வாயினுள் மண்ணைப் போட்டுக் கொள்கிறான்; யசோதை வாய் திறக்கச் சொல்கிறாள்; வாயில் மண்ணை மட்டும் அன்று; இந்த வையகம் முழுவதையும் காண்கிறாள்; மற்றைய மாதராரும் வந்து காண்கின்றனர்; அவர்கள் என்ன சொல்கிறார்கள்? “இவன் ஆயன் அல்லன்; அருந்தெய்வம், மாயப் பண்பு உடையவன்; நன்மை செய்பவன்’ என்று கூறுகின்றனர்.
“உலகம் இறைவனுள் அடக்கம்” என்னும் செய்தியை வாயினுள் வையகம் கண்ட காட்சியில் உணர்த்துகிறார். அவன் அமானுஷ்யன்: “மனிதனுக்கு அப்பாற்பட்ட தெய்வம்” என்பதை “மகன் அல்லன்; அருந் தெய்வம்” என்னும் தொடரால் உணர்த்துகிறார். “அதீத செயல்களை ஆற்றுபவன் (Super man)” என்னும் கருத்தை “மாயச் சீர் உடைப் பண்பினன்” என்று கூறி உணர்த்துகிறார்.
“உலகத்திற்கு நன்மை செய்ய அவதரித்தவன்” என்பதைப் ‘பாயன்’ என்னும் தொடரால் குறிப்பிடுகின்றார்.
இதோ அந்தப் பாடல்
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்,
“ஆயர் புத்திரன் அல்லன்; அருந்தெய்வம்;
மாயச் சீருடைப் பண்புடைப் பாலகன்;
பாயன்” என்று மகிழ்ந்தனர் மாதரே
-பெரியாழ்வார் திருமொழி
இதுவே கண்ணனின் அவதாரப் பெருமையாகும். இந்தக் கண்ணனின் கதையில் ஒரு சிறிய பகுதியை அருணகிரியார் தமது இத்திருப்புகழில் குறிப்பாகக் காட்டியுள்ளார். அவை என்னென்ன? முதலில் வேணுகானம். அருணகிரியார் இத்திருப்புகழில் வரையுள் ஓர் நிரை பரவி வர எனப் பாடுகிறார். கண்ணன் இசைத்த வேணுகானத்தால் பசுக்கள் அவனைச் சுற்றி நின்று கானத்தைக் கேட்டனவாம். இதனை ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றிய சிம்மேந்திர மத்யம இராகப் பாடலான அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் என்ற நாட்டியப் பாடல் மிக அழகாகச் சொல்லும். இப்பாடலை இதுவரை கேட்டதில்லை என்றால் கேட்டுப்பாருங்கள்; இதுவரை இப்பாடலை நாட்டியமாகப் பார்த்ததில்லை என்றால் பாருங்கள்; யூட்யூபில் நிறைய ஆடியோக்கள், வீடியோக்கள் உள்ளன. இப்போது பாடலைப் பார்க்கலாம்.
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்)
இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்)
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத
வேணுகானம் ராதேயிடம் ஈந்தான்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்குமுகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி
நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என மனநிறை
முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)
அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த
அதிசயத்தில் சிலை போல நின்று
நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
இசையாறும் கோபாலன் நின்று இங்கு
எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்) ||
இளம் பிள்ளைகளுக்கு இப்பாடலை சொல்லிக்கொடுக்கும்போது அவர்கள் மிக ஆர்வமாகப் பாடுவார்கள். இந்தப் பாடலில் உள்ள தாள மாறுதல்கள் அவர்களுக்குப் பாடப்பாட ஆர்வத்தைத் தூண்டும்.