பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 16, கண்ணன் – என் சீடன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கண்ணன் என் சீடன் பாடலின் தொடர்ச்சி. . .
எழுதுக” என்றேன்; இணங்குவான் போன்றதைக்
கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்,
”செல்வேன்” என்றான். சினந்தீ யாகிநான்
”ஏதடா, சொன்ன சொல் அழித்துரைக் கின்றாய்;
பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது … 115
பிழையிலை போலும்” என்றேன். அதற்கு,.
”நாளவந் திவ்வினை நடத்துவேன்” என்றான்.
”இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச்
செய்கின் றனையா? செய்குவ தில்லையா?
ஓருரை சொல்” என்றுமினேன். கண்ணனும் … 120
”இல்லை” யென் றொருசொல் இமைக்கு முன் கூறினான்.
வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்
கண்விசந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான்
”சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும்
இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே. … 125
என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ
போந்திடல் வேண்டா, போ, போ, போ” என்று
இடியுறச் சொன்னேன்; கண்ணனும் எழுந்து
செல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட
”மகனே! போகுதி வாழ்கநீ; நின்னைத் … 130
தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்.
தோற்றுவிட்டேனடா! சூழ்ச்சிகள் அறிந்தேன்.
மறித்தினி வாராய், செல்லுதி வாழி நீ!”
எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். … 135
சென்றனன் கண்ணன். திரும்பியோர் கணத்தே
எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;
காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்.
”ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன்.
தொழில்பல புரிவேன், துன்பமிங் கென்றும், … 140
இனிநினக் கென்னால் எய்திடா” தெனப்பல
நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்.
மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்:
”மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் … 145
அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்;
தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெல்லாம்
ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ” என்றான். வாழ்கமற் றவனே! … 150
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
யார் இந்த மாயக் கண்ணன்? நானாக என்னுள்ளேயும் இருக்கிறான், என்னிலிருந்து மாறாய் பிறனாகவும் இருக்கிறான், நானும் பிற பொருளுமாய் இரண்டறக் கலந்துமிருக்கிறான், இவ்விரண்டிலும் வேறு வேறாயும் இருக்கிறான், இவன் என்ன மாயம் செய்கிறான்? “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க” என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறியபடி இவன் மூல வஸ்துவாயிருக்கிற பொழுது ஒன்றாகவும், அதிலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் இரண்டாவது வஸ்து எதுவுமில்லை எனவும், ஆனால் இந்தப் பிரபஞ்சமாக அவன் நீக்கமற நிறைந்திருக்கும் போது எண்ணற்ற பலகோடி பொருள்களாகவும், உயிர்களாகவும் காட்சியளிக்கிறான்.
இந்த வரிகளில் பாரதியார் அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைத கொள்கைகளை மிக எளிதாக எடுத்துச் சொல்கிறார். தங்கக் கட்டி ஒன்றுதான் எனினும், அதிலிருந்து செய்யப்பட்ட ஆபரணங்கள் பல ரூபங்களாகும்.
இப்படிக் காட்சியளிக்கும் கண்ணன் சில நேரங்களில் என்னைக் காட்டிலும் அறிவிற் குறைந்தவன் போலவும், என்னோடு சேர்ந்து பழகி, நான் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவன் மேம்பாடு எய்துவான் போலவும், நான் பாடுகின்ற கவிதைகள் அறிவும் பெருமை பெற்றது போலவும், இந்தக் கள்வன் கண்ணன் என்னிடம் சீடனாக வந்து சேர்ந்தான். அட தெய்வமே! அவன் அப்படிச் செய்த சூழ்ச்சி வலையில் நான் விழுந்து அதனால் பட்ட தொல்லைகள் பெரிய பாரதக் கதை போன்றது. நானே என் மனத்தினை வெல்லமுடியவில்லை; நான் இந்த உலகத்தினை மாற்றிவிட முடியும்? உலகத்தாரை இன்பத்தில் இருக்கச் செய்ய முடியும்? என்று எண்ணிக் கொண்டதற்காகத் தண்டிக்கக் கருதியோ என்னவோ இந்த மாயக் கண்ணன் வலிய வந்து என்னிடம் சீடனாகச் சேர்ந்து கொண்டான்.
என்னை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளியும், என்னுடைய புலமையை வியந்து பாராட்டியும் பல வழிகளில் அவன் மீது அன்பு கொள்ளச் செய்தான். வெறும் வாயை மெல்லும் கிழவிக்கு ஒரு பிடி அவல் கிடைத்தாற்போல்தான். நானும் அவன் முகஸ்துதிக்குக் கட்டுண்டு இவனை எப்படியும் நல்ல பண்புகள் உள்ளவனாக உயர்த்திவிடுவது என்ற ஊக்கத்தோடு அவனுக்குப் பல உபதேசங்கள் செய்யத் தொடங்கினேன்.
“இதோ பாரடா கண்ணா! நீ இன்ன இன்னதெல்லாம் செய்யக்கூடாது, இன்னாரோடெல்லாம் பழகக்கூடாது, இப்படியிப்படி யெல்லாம் பேசக்கூடாது, இவற்றையெல்லாம் விரும்பக்கூடாது, இதெல்லாம் படிக்கக்கூடாது, இன்ன நூல்களைத்தான் நீ கற்க வேண்டும், இன்னாரோடு மட்டும் நட்பு கொள்ள வேண்டும், நான் சொல்லுவனவற்றை மட்டும் விரும்ப வேண்டும்” என்று பல தருமங்களைச் சொல்லிச் சொல்லி அவனோடு உயிரை விடலானேன்.
நாம் கதைகளில் படிக்கிறோமல்லவா? கணவன் எதையெல்லாம் சொல்லுகிறானோ அதற்கு நேர் மாறாகச் செயல்புரியும் மனைவி பற்றி, அதனைப் போல் இவனும் நான் சொல்லுவதற்கெல்லாம் நேர் எதிராகவே எல்லாவற்றையும் செய்யலானான். ஊரிலுள்ள மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்த எனக்கு, நான் சொன்னதற்கு மாறாக அவன் நடக்கும் விநோதத்தையும், ஊரார் வெறுக்கும் அத்தனை ஒழுக்கக்கேட்டையும் தலைமேல் ஏற்றுக்கொண்டு பழிச்சொல்லுக்கு ஆளாகி, எல்லோரும் இகழும்படியாக என் மனம் வருந்தும்படி நடந்துகொள்வதையும் கண்டேன்.
கண்ணனோ நாளாக நாளாக தனது கெட்ட நடத்தையால் எல்லை மீறிப்போய் வீதியில் பெரியோர்களும், மூத்தோர்களும் இவனைக் கண்டு கிறுக்கன் என்று இகழ்ந்து பேசும் நிலைக்கு வந்து விட்டான். எனக்கு ஏற்பட்ட வருத்தத்துக்கு அளவே கிடையாது. முத்தான இளைஞனாக உருவாக்க நினைத்த எனக்கு இவன் இப்படிப் பித்தன் என ஊராரிடம் பெயர் வாங்கிக்கொண்டு அவர்கள் பேசிய பேச்செல்லாம் இவன் கேட்டுக்கொள்வது என் நெஞ்சை அறுத்தது. அவனைக் கூப்பிட்டு சாத்திரங்களை போதித்து அவனை எப்படியும் மாற்றிவிடுவது என்று அவனைத் துளைத்தெடுத்தேன்.
அவன் தேவனாக ஆகாவிட்டாலும், மானுட நிலைக்காவது அவனைத் தேற்றிட வேண்டுமென்று நினைத்து கோபம் கொண்டு கொதித்துப் போய் திட்டியும், சில நேரம் சிரித்துக்கொண்டு நயமாகச் சொல்லியும், சள்ளென்று சில நேரம் எரிந்து விழுந்தும், கேலிகள் பேசி மாற்ற முயன்றும் இன்னும் எத்தனையோ வழிகளில் என் வழிக்கு அவனைக் கொண்டு வர முயன்றேன். அவனா கேட்கிறவன்? பித்தனாக ஆகி, காட்டானாக மாறி, எந்த வேலையிலும் கவனமில்லாதவனாகி, எந்த பயனிலும் கருத்தில்லாதவனாகி, குரங்கு போல, கரடியைப் போல, கொம்புகள் உடைய பிசாசு போல ஏதோவொரு பொருளாக எப்படியோ நின்றான் அவன்.
அதனால், அகந்தையும், மமதையும் ஆயிரம் புண்ணாகி கடுமையான கோபத்துக்கு நான் ஆளாகி எப்படியாவது இந்த கண்ணனை நேராக ஆக்கிக் காட்டுவேன் என்று என் மனதிற்குள் தாபம் கொண்டு, இவனை எப்படியாவது ஒரு தொழிலில் ஓரிடத்தில் தக்கச் செய்வதென்று எண்ணி, அதற்குச் சமயம் பார்த்துக் காத்திருந்தேன்.