திருப்புகழ்க் கதைகள் 182
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியம் –
கருவின் உருவாகி – பழநி
பரவைக்கு தூது சென்ற பரமன் 2
திருவாரூரில் வசந்தவிழா விசேஷம் வந்தது. அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சுந்தரருக்கு பிறந்தது. அதனால் சங்கிலி நாச்சியாருக்கு கொடுத்த வாக்கை மீறி, ஊர் எல்லையைத் தாண்டிச் சென்றார் சுந்தரர். வாக்குறுதியை மீறியதும் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. அதன்பின் பல சிவத்தலங்களுக்குச் சென்று, பார்வை வேண்டி சுந்தரர் பதிகங்கள் பாடினார்.
அவர் மீது கொண்ட இரக்கத்தால், திருவெண்பாக்கம் என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோலை மட்டும் கொடுத்தார் ஈசன். அதைப் பெற்றுக்கொண்டு, தன் அடியார்களின் உதவியுடன் பல சிவத்தலங்களை தரிசிக்கச் சென்றார், சுந்தரர். ஒரு கட்டத்தில் காஞ்சீபுரம் வந்து ஏகாம்பரநாதரை வணங்கினார். அங்கு ஏகாம்பரநாதரை உருகிப் பாடினார். இதில் மனம் மகிழ்ந்த ஈசன், சுந்தரருக்கு இடது கண் பார்வையை வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து இன்னும் சில சிவத் தலங்களுக்குச் சென்று வழிபட்ட சுந்தரர், திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு ஈசனிடம் மன்றாடி வலது கண் பார்வையையும் பெற்றார். இடையில் சுந்தரர் காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருஆமாத்தூரைத் தரிசித்துப் (இத்தலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது) பரவிப் பின் சோழநாட்டிலுள்ள திருவரத்துறையைப் பணிந்து (திருவரத்துறை விருத்தாசலத்திற்கு அருகே தொழுதூரில் உள்ளது), வழிதோறுமுள்ள திருத்தலங்களைப் போற்றியவாறே திருஆவடுதுறையினை அடைகின்றார்.
அடியவர்கள் எதிர்கொள்ள உட்சென்று, மாசிலாமணீஸ்வரப் பரம்பொருளைத் தொழுது, ‘உனையன்றி யார் எனக்கு உறவு ஐயனே?’ எனும் நெகிழ்விக்கும் திருப்பதிகத்தினால் போற்றுகின்றார். முன்னமே வலக்கண் பார்வை மறைப்பிக்கப் பெற்றிருக்கும் நிலையில், புதிதாக வந்தெய்தும் சரும நோயினாலும் நம் சுந்தரனார் வாட்டமுறுகின்றார், இதனை 2ஆம் திருப்பாடலில் கண்ணிலேன் உடம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன் என்று முறையிட்டு வருந்திப் பாடுகின்றார்.
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்தெனை ஆண்டு கொண்டானே கண்ணிலேன் உடம்பில்அடு நோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன் தெண்ணிலா எறிக்கும் சடையானே தேவனே திருவாவடுதுறையுள் அண்ணலே எனை அஞ்சல் என்றருளாய் ஆர் எனக்குறவு அமரர்கள் ஏறே
(சுந்தரர், திருவாவடுதுறை தேவாரம் – திருப்பாடல் 2)
பின் அங்கிருந்து புறப்பட்டுத் திருத்துருத்தியினை அடைந்து வணங்கி, ‘ஐயனே! அடியேனை வாட்டும் இச்சரும நோயினைப் போக்கியருள வேண்டும்’ என்று விண்ணப்பிக்கின்றார். திருத்துருத்தி மேவும் தேவதேவரும் அசரீரியாய் ‘அன்பனே, நமது வடகுளத்தில் நீராடிப் பிணி நீங்கப் பெறுவாய்’ என்றருள் புரிகின்றார்.
பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திருவருள் புரிவார்
விரவிய இப்பிணியடையத் தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர் வண்டறை தீர்த்த வடகுளத்துக் குளிஎன்னக்
கரவில் திருத்தொண்டர்தாம் கைதொழுது புறப்பட்டார்
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 298)
நம்பிகள் நான்மறை நாயகரைத் தொழுது ஆலய வளாகத்திலுள்ள திருக்குளத்தினை அடைந்து வணங்கி, திருவருளை நினைத்தவாறே அதனுள் மூழ்கியெழ, உற்ற பிணி அகல்வதோடு மட்டுமன்றி, யாவரும் அதிசயிக்குமாறு புதுப்பொலிவோடு கூடிய திவ்யத் திருமேனியையும் பெற்று மகிழ்கின்றார்,
மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்அணைந்து வேதமெலாம்
தொக்க வடிவாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும் புதியபிணியது நீங்கி
அக்கணமே மணியொளிசேர் திருமேனிஆயினார்
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 299)
குளத்தினின்றும் வெளிப்பட்டு, ஆடைகள் புனைந்து, அடியவர்களும் உடன் வர உட்சென்று, ‘மின்னுமா மேகங்கள்’ எனும் பனுவலால், ‘உத்தவேதீஸ்வரர்; சொன்னவாறு அறிவார்’ எனும் திருநாமங்களுடைய திருத்துருத்தி முதல்வரின் திருவருளை வியந்து போற்றிப் பரவுகின்றார்,
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்துஅருவி
வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்தெற்றும்
அன்னமாம் காவிரி அதன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவாறறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெருமானை
என்னுடம்பு அடும்பிணி இடர் கெடுத்தானை
(சுந்தரர் தேவாரம் – திருத்துருத்தி – திருப்பாடல் 1)
‘திருத்துருத்தி’ நாகப்பட்டின மாவட்டத்தில் அமைந்துள்ள ‘காவிரி தென்கரைத் தலம்’, தற்கால வழக்கில் ‘குத்தாலம்’. திருவாவடுதுறையிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், திருமணஞ்சேரி; திருவேள்விக்குடி தலங்களிலிருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமையப் பெற்றுள்ளது. மயிலாடுதுறை கும்பகோணம் மார்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.