
திருப்புகழ்க் கதைகள் 190
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
குழல் அடவி – பழநி 4
சேதுபந்தனம் (தொடர்ச்சி)
முதல் முறை பாணம் எய்தும் வருணன் வராததால் இராமன் மீண்டுமொரு பாணத்தை எய்யப் போனார். அப்பொழுது அண்ணனின் பாதங்களில் விழுந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டு தடுத்தார் இலட்சுமணர். அண்ணா, வேண்டாம். தங்களது பாணத்தால் சமுத்திர நீர் சூடானதால் உலக உயிர்கள் அனைத்துமே நடுக்கம் கொள்கின்றன; அனைத்து உயிரினங்களும் தவிக்கின்றன; எனவே தாங்கள் சினத்தை விடுங்கள்! என்று கெஞ்சினார் இலட்சுமணர். ஆனால் ஆருயிர் தம்பி மன்றாடிய போதும், இராமபிரான் சினம் தணியாமல் அம்பை எய்ய போனார்.
இந்த சமுத்திரமே தங்களது முன்னோர்களான சகர புத்திரர்களால் உருவானதே. அப்படியிருக்க, நன்றிகெட்டு இந்தச் சமுத்திரராஜன் நடந்து கொள்கிறான்; அப்படிப்பட்டவனுக்கு தண்டனை அளிப்பது சரியானதே என்றார் சுக்ரீவன். இராமர் பாணத்தை விட தயாரானதும், சமுத்திரராஜன் பதறித் துடித்து, அவர் முன் வந்து காட்சி அளித்தார். இராமபிரானை வணங்கியவாறு சமுத்திரராஜன் பேச ஆரம்பித்தார்.
ஐயனே! பஞ்சபூதங்கள் அனைத்தும் தத்தம் நிலமையில் மாறாது இருப்பதே இறைவனால் விதிக்கப்பட்டது. சமுத்திரமாக இருக்கும் நான் பெரும் ஆழம் கொண்டு, சுலபத்தில் என்னை யாரும் தாண்டி செல்லாத முடியாதவாறும் இருப்பதே எனக்கு விதிக்கப்பட்டது. நான் எனது நீரோட்டத்தை நிறுத்திவிட்டு, தாங்கள் அனைவரும் நடந்து செல்லும் விதத்தில் செய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு நான் ஒரு உதவியைச் செய்கிறேன். என் மீது போடப்படும் கற்கள் அமிழ்ந்து போகாமல் நான் தாங்கிக் கொள்கிறேன்.
தங்களது வானர சேனையில் இருக்கும் நளன், தேவலோக சிற்பி விஸ்வகர்மாவின் மகன். எனவே அவரால் மிகத் திறமையாக சமுத்திரத்தின் மீது பாலம் அமைக்க முடியும். எனவே அவனைக் கொண்டு பாலம் அமைத்து நீங்கள் இலங்கைக்கு செல்லுங்கள். என் மீது போடப்படும் மரக்கட்டைகள், கற்கள் எதுவும் அமிழ்ந்து போகாமல் தாங்கிக் கொள்கிறேன்! என்றார் சமுத்திரராஜன்.
எனவே இராமபிரானும் சாந்தம் கொண்டு, கடலின் மீது பாலம் அமைக்க சிவபெருமானை நோக்கிப் பூஜை செய்தார். அவருக்குச் சிவபெருமானும் காட்சி கொடுத்தருளினார். எனவே தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகனான நளன், நீலன் என்ற இன்னொரு வானர சிற்பியோடு இணைந்து, பிற வானரங்களின் உதவியுடன் பாலம் அமைக்க ஆரம்பித்தனர்.
சுக்ரீவனின் வானரச்சேனையில் ஜாம்பவான் என்ற கரடிகளின் தலைவரும் இருந்தார். (உலகம் தோன்றிய போதே தோன்றியவர் ஜாம்பவான்; மிகவும் வல்லமையும் பராக்கிரமும் உடையவர். இந்த பூவுலகையே பலமுறை பறந்தே சுற்றி வந்த வல்லமை உடையவர். மிகப்பெரிய கரடிகளின் படைக்கு ஜாம்பவான் தலைவராக இருந்தார். அக் கரடிகளின் படையும் சுக்ரீவனின் வானரச்சேனையில் இருந்தது.)
வானரங்கள் பெயர்த்தெடுத்து வந்த பாறைகள் அனைத்தையும் இராமபிரானின் காலடியில் வைத்தன. ஶ்ரீராமபிரான் அதில் தனது பெயரை எழுதி கொடுக்க, அவற்றை நளனிடம் கொடுத்தன வானரங்கள். நளன், நீலன் என்ற வானர சேனையில் இருந்த முக்கிய கட்டடக்கலை நிபுணர்கள் இருவரும் சேர்ந்து பாலத்தை அமைத்தனர்.
வானரங்கள் சற்றும் தளராது உற்சாகமாக வேலை செய்தனர். அதனைக் கண்ட இராமபிரானும், இலட்சுமணரும் மிகவும் மகிழ்ந்தனர். கடற்கரையோரத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்து இருவரும் பாலம் அமைக்கும் பணியை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வனங்களில் இருந்த அணில்களுக்கு இராமபிரானின் கண்களில் தெரிந்தக் கனிவும், சாந்தமும் ஏதோ விவரிக்க இயலாத அன்பை அவர் மீது ஏற்படுத்தின. எனவே நாமும் இக் குரங்குகளின் பணியில் ஈடுபடவேண்டும்! என்று அந்த அணில்கள் நினைத்தன.
எனவே அந்த சமுத்திரத்து கடலலைகளில் புரண்டு விட்டு வந்த அணில்கள், கடற்கரை மணலில் புரண்டன. பின்னர் தனது உடலில் ஒட்டிக் கொண்டிருந்த மணலை, வானரங்கள் சமுத்திரத்தின் மீது போட்ட பாறைகளின் மீது கொண்டு உதிர்த்தன. தொடர்ந்து இந்த அணில்கள் இவ்வாறு செய்து கொண்டே இருக்க, இலட்சுமணர் மிகவும் வியந்தார். அண்ணா, இந்த அணில்கள் செய்வதைப் பார்த்தீர்களா? என்றார்.
ஆசியக் கண்டத்தின் இப்பகுதிகளில் வாழும் இவ்வகை அணில்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. அது என்ன தெரியுமா? நாளை காணலாம்.