
2022ஆம் ஆண்டு ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை
ஒரு அறிமுகம்
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
2022ஆம் ஆண்டு ICC ஆண்கள் டி20 கிரிக்கட் உலகக் கோப்பை போட்டிகள் 16 அக்டோபர் 2022 முதல் 13 நவம்பர் 2022 வரை நடக்கவிருக்கிறது. போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட், பிரிஸ்பேன், பெர்த், மெல்போர்ன் ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்ற அணிகள்
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நமீபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 12 அணிகள், நேரடியாக 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டினில் நடந்த போட்டியின் பங்கேற்பாளர்களான இந்த அணிகள் தேர்வாகியிருக்கின்றன.
முதல் சுற்றிலே A, B என்ற இரண்டு பிரிவுகளில் எட்டு அணிகள் விளையாடவுள்ளன. குரூப் A பிரிவில் நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்டு ஆகிய அணிகள். குரூப் B பிரிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாவே ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. அக்டோபர் 16, 2022 முதல் அக்டோபர் 21, 2022 வரை முதல் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. இரு பிரிவுகளில் இருந்தும் முதலிரண்டு அதிகப் புள்ளிகள் பெறுகின்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன.
சூப்பர் 12 சுற்று
இந்தச் சுற்றில் மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளில் இடம் பெறுகின்றன. குரூப் 1இல் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, முதல் சுற்றில் குரூப் A பிரிவில் முதலிடம் பெற்ற அணி, குரூப் B பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற அணி இடம்பெறுகின்றன. குரூப் 2இல் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, முதல் சுற்றில் குரூப் A பிரிவில் இரண்டாம் பெற்ற அணி, குரூப் B பிரிவில் முதலிடம் இடம் பெற்ற அணி ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. 22 அக்டோபர் 2022 முதல் 6 நவம்பர் 2022 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி 9 நவம்பர் முதல் 13 நவம்பர் வரை நடை பெறவுள்ளன.
போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறத்தாழ 13 கோடி ரூபாய் பரிசாகப் பெறும். இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ஆறரை கோடி ரூபாய் வழங்கப்படும்.