தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் அருளுரைகள்!
வ்யாக்ரீவதிஷ்டதி ஜரா பரிதர்ஜயந்தி – முதுமையும் அதிலிருக்கும் கஷ்டங்களையும் யாராலும் தவிர்க்க முடியாது. அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது.
ரோகாச்ச சத்ரவ இவ ப்ரஹரந்தி தேஹம் – இந்த சரீரம் வியாதிகளால் பயமுறுத்தப்படுகிறது.
வியாதிகளைக் கண்டு பயமில்லை என்று யாராலும் கூற முடியாது. வியாதிகளே இல்லாத மனிதனைப் பார்ப்பது மிகவும் துர்லபம். அப்படி இருக்கையில் மனிதனுக்கு எங்கே சாசுவதமான சுகம் இருக்கிறது? மரணம், மீண்டும் வேறொரு தாயின் வழியாகப் பிறப்பு என இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால் எங்கே சந்தோஷத்தை அனுபவிப்பது?
இந்த பிறப்பு-முதுமை-இறப்பு என்னும் சக்கரத்தில் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டேயிருக்கும் ஒரு வலையில் நாம் விழுந்துவிட்டோம், இதுதான் பந்தம் ஆகும். யாருக்கு இந்தப் பந்தம் இருக்கிறது? இது உடம்பிற்கா அல்லது ஆத்மாவிற்கா? இது உடம்பிற்குத்தான். ஆத்மாவிற்கு பந்தம் என்றும் இல்லை.
“நாம் எந்த சுகத்தை அடைய நினைக்கிறோமோ அது (அந்த சுகம்) இந்த லெளகிகமான விஷயங்களினால் கிடைக்காது. ஆகையால் திரும்பவும் இந்த விஷயங்களில் ஈடுபடுவது வீண்” என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.
அப்படியென்றால், “எதில் வாஸ்தவமான சுகம் கிடைக்கும்?” என்று கேட்டால், “பகவானுடைய நினைவு மனதில் இருந்தால், மனதில் ஸத்விஷயங்களைப் பற்றி நினைத்தால், அப்போதுதான் வாஸ்தவமான சுகம் நம் அனுபவத்திற்கு வரும்” என்பதே அதற்குப் பதில், எல்லோரும் இதை அனுபவித்துப் பார்க்கலாம்.
மற்ற எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு பகவானுடைய சன்னிதியில் ஒரு பத்து நிமிடங்கள் உட்கார்ந்து வேறு எதையும் சிந்திக்காமல், பகவானுடைய ரூபத்தை மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்போது மனதிற்கு ஒரு சொல்ல முடியாத இன்பம், ஒரு சொல்ல முடியாத ஆனந்தம் உண்டாகும் என்பதை நாம் நம் அனுபவத்திலேயே பார்க்கலாம்.
பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?
இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர், “பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய மனதை உன்னுடைய பாதார விந்தத்திலே வைத்துவிடுகிறேன். எனக்கு அனுக்ரஹம் செய்” என்று வேண்டினார்.
மனதை பகவானுடைய பாதாரவிந்தத்திலே வைப்பது என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? மனம் என்பது கைக்கு கிடைக்கக்கூடிய பொருளா? அப்படி கிடைக்கக்கூடியதாக இருந்தால் அதை சுலபமாக எடுத்து வைத்து விடலாமே? ஆனால், அது கைக்குக் கிடைக்காதே!
பின்பு எப்படி மனதை பகவானின் பாதாரவிந்தத்திலே வைத்து விடுவதாகச் சொல்கிறார் என்றால், “பகவானே! எப்பொழுதும் உன்னுடைய பாதாரவிந்தத்தையே நான் நினைக்கும்படி எனக்கு அனுக்ரஹம் செய்” என்று அதற்கு அர்த்தம்.