
திருநெல்வேலி அருகே அமைந்துள்ள செய்துங்கநல்லூரில் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிறு இன்று நெல்லை உழவாரப் பணிக் குழுவினர் கோயிலை சுத்தப் படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானது வரதராஜ பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஒரு காலத்தில் தேர் ஓடி உள்ளதாகக் கூறப்படுகிறது. தெப்பம் உள்பட பல சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் நடந்த கோயிலாகவும் இந்தக் கோயில் இருந்துள்ளது. அருகே மிகப்பெரிய அக்ரகாரம் இருந்துள்ளது. இந்த அக்ரஹாரத்தில் இருந்த பிராமணர்கள், இந்தக் கோயிலை மிகச்சிறப்பாக திருவிழாக்களோடு கொண்டாடி உள்ளனர்.
பிராமணர்கள் அக்ரஹாரங்களை விட்டு இடம் பெயரத் தொடங்கிய பின், நாளடைவில் இந்தக் கோயில் அத்தகைய சிறப்பான வழிபாடுகளை இழந்து விட்டது. முட்புதர்கள் அடர்ந்து இந்தக் கோயில் ஒரு காலபூஜை திட்டத்துக்குள் வந்து விட்டது.
தற்போது இந்தக் கோயிலில் நெல்லை உழவாரப்பணிக் குழு தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் உழவாரப்பணிகளைச் செய்து வருகிறார்கள். இன்று, கோயில் வளாகத்தில் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி நடந்தது. இந்தப் பணியை கோயில் நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன் ஆய்வு செய்தார். அவருடன் கோயில் எழுத்தர் இசக்கி முத்து உள்பட பலர் இருந்தனர்.

இன்று நடைபெற்ற உழவாரப்பணி குறித்து முத்துகிருஷ்ணன் கூறியபோது, இன்று செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் பணி நடைபெற்றது. கோயில் ஈ ஓ மணிகண்டன் உடனிருந்தார்.
பெருங்குளம் பெருவழுதீசுவரர் கோயிலிலும் உழவாரப் பணி நடந்தது. அதிலும் திருக்குளத்தில் அதிக பாசி படர்ந்திருந்ததை அகற்றும் பெரும்பணி நடந்தது.

செய்துங்க நல்லூரில் சிலரை திருக்குளப் பணிக்கு விட்டுவிட்டு, பெருங்குளத்தில் பெருவழுதீசர் கோயில் பணியில் ஈடுபடலானோம்… என்றார்.