உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 16 – 2023 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஒரே ஒரு நாள் மட்டுமே ஆகும்!
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் உலகக் கோப்பையின் 13வது பதிப்பாகும். இது 2023 அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கோப்பையை வென்ற இங்கிலாந்து உட்பட 10 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கும். 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தப் போட்டிகளை இந்தியா நடத்தியது. தற்போது இந்தியாவால் மட்டுமே நடத்தப்படும் முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இதுவாகும். இறுதிப் போட்டி 19 நவம்பர் 2023 அன்று, அகமதபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் அரையிறுதிப் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த பதிப்பின் கோஷம் “It takes one day” (ஒரே ஒரு நாள் மட்டுமே ஆகும்) ஆகும்.
அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை
முதலில், உலகக் கோப்பை 2023 பிப்ரவரி 9 முதல் மார்ச் 26 வரை நடைபெற இருந்தது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தகுதி அட்டவணை சீர்குலைந்ததன் விளைவாக போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு மாற்றப்படும் என்று ஜூலை 2020 இல் அறிவிக்கப்பட்டது. ஐசிசி போட்டி அட்டவணையை ஜூன் 27 அன்று வெளியிட்டது.
2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது அணியை அனுப்ப மறுத்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக அச்சுறுத்தியது. 15 ஜூன் 2023 அன்று, பிசிபி முன்மொழிந்தபடி 2023 ஆசியக் கோப்பை ஹைப்ரிட் மாதிரியில் நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. இருப்பினும், 2023 ஆசிய கோப்பையின் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பாகிஸ்தான் அரசின் அனுமதிக்கு உட்பட்டு, நாக் அவுட் போட்டிகளைத் தவிர, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எந்த குரூப் லீக் போட்டிகளையும் விளையாட விரும்பவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கட் போர்டின் முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்தார். பெங்களூரு, சென்னை அல்லது கொல்கத்தாவில் அவர்களது அனைத்து ஆட்டங்களும் விளையாட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஜூலை 2023இல், இந்தியாவில் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து பதட்டங்கள் எழுந்தன. பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஸ்காட்லாந்து அணி அவர்களின் இடத்தைப் பெறுவார்கள்.
பங்கேற்கும் அணிகள்
முந்தைய உலகக் கோப்பையைப் போலவே, இந்தப் போட்டியிலும் 10 அணிகள் பங்கேற்கும், ஆனால் ஒருநாள் கிரிக்கட் தரவரிசையை விட புதிய ICC கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் (2020-2023 போட்டிகள்) மூலம் தகுதி பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் விளையாடிய அணிகளில் முதல் 8 அணிகள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன. போட்டியை நடத்தும் நாடு அணி தானாகவே தகுதி பெறும். இருப்பினும் இந்தியா சென்ற உலகக் கோப்பை போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்ததால், போட்டியில் இடம் பெற்றது. ஜூன் மற்றும் ஜூலை 2023 இல், தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜிம்பாபேயில் நடந்தன.
ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்த பின்னர் தகுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய முன்னாள் வெற்றியாளர்களான மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்க்காத முதல் உலகக் கோப்பை இதுவாகும். முழு உறுப்பினர்களான அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகியவையும் தகுதியை தவறவிட்டன, அதாவது தகுதிச் சுற்றில் பங்கேற்ற நான்கு முழு உறுப்பினர்களில் மூன்று பேர் தகுதி பெறவில்லை, அதே சமயம் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய இரண்டு முன்னணி அணிகளும் எலிமினேட்டர் ஆட்டத்தில் பங்குபெற்று, இறுதியில் நெதர்லாந்து தகுதி பெற்றது. தகுதிச் சுற்று ஆட்டங்களில் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் அணி இலங்கை அணியாகும்.
மைதானங்கள்
ஆட்டங்கள் அகமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானம், பெங்களூரு எம். சின்னசாமி மைதானம், சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், தர்மஸ்தலாவில் உள்ள HPCA மைதானம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானம், கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானம், லக்னோ BRSABV Ekana மைதானம், மும்பை வான்கடே மைதானம், புணேவில் உள்ள மகராஷ்ட்ரா கிக்கெட் மைதானம் ஆகிய பத்து மைதானங்களில் நடக்க உள்ளது. அரையிறுதி ஆட்டங்கள் மும்பை, கொல்கொத்தாவிலும், இறுதி ஆட்டம் அகமதாபாத்திலும் நடைபேறும். ஒவ்வொரு மைதானத்திற்கும் 50 கோடி ரூபாய் இந்திய கிரிக்கட் சங்கம் கொடுக்க உள்ளது. இந்தத் தொகை மைதானத்தை மேலும் மேம்பட்டதாக்கப் பயன்படும்