ஒரு பிடி அவல் கொடுத்த குசேலருக்கு கிருஷ்ணர் என்ன கொடுத்தார் தெரியுமா?
கிருஷ்ணன் நட்புக்கு மதிப்பளிப்பவன். நண்பர்களுக்காக எல்லாம் செய்வான். கேட்காமலேயே கொடுப்பான். நண்பர் குசேலரின் ஏழ்மையைப் போக்க அவர் பெற்றது என்னவோ ஒரு பிடி அவல் தான்!
கிருஷ்ண ஜயந்தி நாளில் குழந்தைக் கண்ணனுக்குப் பிடித்தமான அவலும் வெண்ணெயும் கொடுத்து வணங்கினால் போதும் கேட்காமலேயே எண்ணற்ற செல்வங்களைத் தருவார் கிருஷ்ணர் எனும் வாக்கியம் மெய்யாகக் காரணமாக இருந்தவர் சுதாமா எனும் குசேலர்!
கோகுலத்தில் சிறுவயதில் கிருஷ்ணன் எத்தனையோ லீலைகளைச் செய்தாலும் துவாரகை மன்னராக அரசாட்சி செய்தபோது நடத்திய லீலை அற்புதமானது. அதுவே குசேலோபாக்கியானம் எனும் சரிதம் வரும் குசேலரின் சரிதத்தில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
அதென்ன மன்னனாக லீலை! இந்த லீலையில் முக்கியமானது, மன்னராக இருந்த போது, தன் பால்ய சிநேகிதர் குசேலருக்கு கேட்காமலேயே செல்வத்தை அள்ளிக் கொடுத்து அவரின் வறுமையைப் போக்கியது! அதற்கு அன்பாக குசேலர் கொடுத்த அந்த ஒரு பிடி அவலே போதும் என்று காட்டியது!. அதன் மூலம் போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு ஏழைக் குசேலருக்கு செல்வத்தை அள்ளிக்கொடுத்தான் கண்ணன்!
கிருஷ்ணருக்கு விளையாட்டுப் பருவத்தில் நிறைய நண்பர்கள் இருந்தாலும் அவருடைய பால்ய நண்பர்களில் சுதாமா எனப்படும் குசேலர் குறிப்பிடத் தக்க ஒருவர். இருவரும் ஒன்றாக சாந்தீபினி மகரிஷியின் குருகுலத்தில் ஒன்றாக இருந்து கல்வி கற்றார்கள். குருகுல வாசம் முடிந்த பிறகு, இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்று அவரவர் தொழிலில் ஈடுபட்டார்கள்.
சுதாமாவும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார். அவருக்கு பிள்ளைச் செல்வம் அதிகம் ஆனதால், அவர்களை வளர்க்க வேண்டிய அளவுக்கு பொருள் செல்வம் கிட்டவில்லை. அதனால் வறுமையில் வாடினார். கட்டிய வேட்டியும் கிழிந்து தொங்கி அதை தையல் போட்டே காலம் ஓட்டினார். இப்படி தையல் போட்ட ஓட்டை வேடியைக் கட்டிக் கொண்டிருந்ததால் இவருக்கு குசேலர் என்று பெயர் சொல்லி அழைத்தனர் உள்ளூர்வாசிகள். குசேலரின் மனைவியோ, எப்படியாவது இந்த வறுமை நீங்கி வசதியோட வாழ வேண்டுமென ஆசைப்பட்டாள்.
சுதாமாவும் தன் மனைவியிடம் குரு குலவாசத்தில் இருந்த போது ஸ்ரீ கிருஷ்ணனிடம் கொண்டிருந்த நட்பையும் அப்போதைய விளையாடல்களையும் சொல்லி மகிழ்வார். அந்நேரம் ஸ்ரீ கிருஷ்ணர் அரசனாக இருந்ததால் சுதா அம்மாவின் மனைவிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. உங்கள் பால்ய சிநேகிதரான நம் மன்னர் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து உங்கள் வறுமையை போக்க ஏதாவது உதவி கேட்டு வரக்கூடாதா என்று சுதாமாவை நச்சரிக்கத் தொடங்கினாள்!
தனது பால்ய நண்பரிடம் போய் எப்படி தான் வறுமையில் வாடுவதாக சொல்லி உதவி கேட்டு நிற்பது என்று பெரும் தயக்கம் சுதாமாவுக்கு ஏற்பட்டது. அப்படியே மனைவி சொல்லைக் கேட்டு அவரிடம் போய் நின்றாலும் அவருக்கென்று கொடுப்பதற்கு ஏதாவது வேண்டுமல்லவா? ஒரு மன்னரை பார்க்கச் செல்லும் பொழுது நன்றாக உடை உடுத்தி செல்ல வேண்டும் அல்லவா? இந்த கந்தல் உடையுடன் சென்றால் வாயில் காப்போன் கூட விரட்டி விடுவானே! கிருஷ்ணரைப் பார்ப்பதற்குக் கூட வாய்ப்பில்லாமல் போய்விடுமே என்று பெரிதும் தயங்கினார் சுதாமா.
அவரது தயக்கத்தை போக்கிய அந்தப் பெண்மணி நிச்சயம் கிருஷ்ணர் உதவுவார் என்ற நம்பிக்கை அளித்து வீட்டில் வேறொன்றும் இல்லாததால் ஏதோ சிறிது வைத்திருந்த அவலை எடுத்து ஒரு கந்தல் துணியில் கட்டி அதை கிருஷ்ணருக்கு அளிக்குமாறு சொல்லி சுதாமாவை அனுப்பி வைத்தாள்!
குசேலரும் துவாரகைக்குச் சென்று சேர்ந்தார். அரண்மனையில் வாயில் காப்போனிடம் தான் ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய சினேகிதர் என்று சொல்லி, அவன் தயவில் அரண்மனைக்குள் புகுந்தார். கந்தல் மூட்டையுடன் நின்ற இளவயது நண்பனைக் கண்ட கிருஷ்ணரும் அன்போடு வந்து வரவேற்றார். அவரை உள்ளே அழைத்துச் சென்று, உயர்ந்த ஆசனத்தில் அமரவைத்தார் கிருஷ்ணர். தனது மனைவி ருக்மிணியை அழைத்து வந்து, குசேலரை அறிமுகமும் செய்து வைத்தார்.
உணவு உபசாரங்கள் எல்லாம் முடிந்த பின் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதும் கூட குசேலர் தாம் வந்த காரணத்தைச் சொல்லவில்லை. அவரால் அதைச் சொல்லவும் முடியவில்லை. அந்நேரம், அவருக்காக பிடிக்குமே என்று அவல் கொண்டு வந்திருப்பதையும் தெரிவிக்க முடியவில்லை. தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு கேவலம் இந்தக் கந்தல் துணியில் கட்டி வைத்திருக்கும் அவலையா உண்ணக் கொடுப்பது என்று நினைத்தார் குசேலர்.
கிருஷ்ணரோ ஒன்றும் தெரியாதவர் போல, குசேலரைப் பார்த்து நீங்கள் வரும் போது உங்கள் மனைவியார் எனக்காக ஒன்றும் கொடுத்து அனுப்பவில்லையா? அவர் நலம்தானே? என்றெல்லாம் விசாரித்தார். பின்னர் அவராகவே குசேலர் தமது துணியில் முடிந்து வைத்திருந்த மூட்டையைப் பார்த்து, இது என்ன என்று கேட்டவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார். பின்னர் சிரித்துக் கொண்டே சுதாமா, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டு சுவைத்தார். அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதை அவரிடம் இருந்து தட்டிப் பறித்து, தமது வாயில் போட்டு சுவைத்தார்.
ஆனால், இப்படிப்பட்ட மகாராணி, ராஜாவிடம் போய் கேவலம் இந்த அவலையா கொடுத்தோம் என கூனிக் குறுகியவாறே, குசேலரும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு, தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார். மனத்துக்குள், தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்தப் பரந்தாமனின் அருகில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே தமக்குப் போதும் என தம்மை சமாதானப்படுத்திக் கொண்டார்.
அதன் பின் ஒருவாறு மனம் சமாதானமடைந்து, வீடு திரும்பிய குசேலருக்கு அவரது வீட்டை அடையாளம் காண முடியவில்லை. தன் வீடு இருந்த இடத்தில் ஏதோ ஒரு மாளிகை இருந்தது. அடையாளமே தெரியாத அளவிற்கு அந்த வீடு மாறியிருந்தது. செல்வச் செழிப்போடு திகழ்ந்ததை கண்டு தான் இடம் மாறி வந்து விட்டோமோ என்று. அவருக்கு ஒரு கணம் திகைப்பு ஏற்பட்டது. ஆனால் தன் குழந்தைகளும் மனைவியும் வெளியில் வந்து பார்த்த போது தான் அது தம் வீடு என்பதை உணர்ந்தார் சுதாமா. தாம் கேட்காமலேயே தமது வறுமையைத் தீர்த்து வைத்த கண்ணனை மனதார நினைத்து வாழ்த்தினார். அதன் பிறகு தமது வாழ்க்கையில் வறுமை என்பதே இல்லாமல், பகவானின் அனுக்கிரகத்தால் தமது மனைவியோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.
இதுவே குசேலோபாக்கியம் எனும் சரித்திரமாக ஸ்ரீமத் பாகவதத்தில் சிறப்புடன் போற்றப்படுகிறது. கண்ணன் எளிமையானவன். எளிமையான தூய அன்புடன் அமைந்த நிவேதனமும் பிரார்த்தனையும் அவருக்கு போதுமானது என்பதை விளக்கும் அருமையான சரித்திரமாக இது அமைந்திருக்கிறது. நட்புக்கு மரியாததை கொடுக்கும் பகவான் கிருஷ்ணர் கேட்டவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும் வரமளிப்பவன் என்பதை இந்த சரித்திரம் உணர்த்துகிறது!
இங்கே ஒரு பிடி அவல் என்பது ஒரு குறியீடு தான். ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறுதல் எனும் வணிக நோக்கிலான பக்தி பகவானிடம் செல்லாது. தூய அன்புடன் அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் பெருமானுக்கான சமர்ப்பணம் என்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்குமே என்ற எண்ணத்தில் தன்னிடம் இருந்த அந்தக் கொஞ்சம் அவலையும் மூட்டை கட்டி எடுத்து வந்த குசேலர், இதன் பின்னுள்ள தத்துவ ரகசியத்தை வெளி காட்டினார். அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்னாளில் பகவத் கீதையில் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் எனும் ஸ்லோகத்தில், ஒருவன் பக்தியுடன் எனக்கு இளையோ பூவோ பழமோ நீரோ எதை அர்ப்பணம் செய்தாலும் அவன் தரும் பொருளை நான் பார்ப்பதில்லை அவனது அன்பான தூய மனதைத்தான் பார்க்கிறேன் என்று உரைத்தார்.
எல்லாம் நிறைந்திருக்கும் பகவானிடம் நாம் எதைக் கொடுத்து அவரை திருப்தி செய்ய முடியும்? அவருக்கு உடைமையான இந்த உள்ளத்தை அவரிடம் சமர்ப்பித்தே அவர் அருளைப் பெற முடியும் என்பதை உணர்த்தியது தான் ஒரு பிடி அவல் எனும் இந்த சுதாமாவின் சரித்திர தத்துவம்!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!